புவனகிரியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


புவனகிரியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Jan 2020 3:45 AM IST (Updated: 15 Jan 2020 2:55 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பரங்கிப்பேட்டை,

புவனகிரி பேரூராட்சி 1-வது வார்டில் உள்ளது வாழக்கொல்லை பகுதி. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடிநீர் சரியான முறையில் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்து பல முறை முறையிட்டனர். கோரிக்கை மனுக்கள் அளித்தும், நடவடிக்கை மேற்கொள்ளாமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.

இதனால் வெகுண்டெழுந்த பொதுமக்கள் நேற்று வாழக் கொல்லையில் சிதம்பரம்-கடலூர் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அப்போது தங்கள் பகுதியில் குடிநீர் வினியோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மின்மோட்டார் பழுதடைந்து உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக நாங்கள் பல்வேறு வேதனைகளை சந்தித்து வருகிறோம். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், அதிகாரிகள் எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உள்ளனர். எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்தால் தான் கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனர்.

இதைக்கேட்ட போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வழி செய்வதாக உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, கடலூர்-சிதம்பரம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story