மாநில தேர்தல் ஆணையர் விவகாரம்: சட்டமன்ற உரிமைக்குழு முன்பு அரசு அதிகாரி ஆஜர்


மாநில தேர்தல் ஆணையர் விவகாரம்: சட்டமன்ற உரிமைக்குழு முன்பு அரசு அதிகாரி ஆஜர்
x
தினத்தந்தி 14 Jan 2020 11:00 PM GMT (Updated: 14 Jan 2020 9:28 PM GMT)

மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உரிமைக்குழு முன்பு உள்ளாட்சித்துறை சார்பு செயலாளர் கிட்டி பல்ராம் ஆஜர் ஆனார்.

புதுச்சேரி,

மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உரிமைக்குழு முன்பு உள்ளாட்சித்துறை சார்பு செயலாளர் கிட்டி பல்ராம் ஆஜர் ஆனார்.

மாநில தேர்தல் ஆணையர்

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரது பெயரை புதுவை அமைச்சரவை சிபாரிசு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பியது. ஆனால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க உள்ளாட்சித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் அப்போது சட்டசபையில் பூதாகரமாக வெடித்தது. கவர்னர் கிரண்பெடியின் உத்தரவின்பேரில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக எம்.எல்.ஏ.க்கள் குற்றஞ்சாட்டினர்.

டி.எம்.பாலகிருஷ்ணன்

இதைத்தொடர்ந்து உள்ளாட்சித்துறையின் அறிவிப்பினை சபாநாயகர் சிவக்கொழுந்து ரத்து செய்தார். அடுத்த நாளே மாநில தேர்தல் ஆணையராக அமைச்சரவையில் முடிவு செய்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான டி.எம்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பதவியேற்றுக்கொண்டதாகவும் சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையரை தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைத்து தேர்வு செய்யவேண்டும் என்றும் அதை கவர்னரே இறுதி செய்வார் என்றும் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தலைமை செயலாளருக்கு உத்தரவிட்ட கவர்னர் கிரண்பெடி ஏற்கனவே நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையரின் நியமன உத்தரவு செல்லாது என்றும் கூறினார்.

சட்டமன்ற உரிமைக்குழு

இதனிடையே கடந்த 7-ந்தேதி மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய உள்ளாட்சித்துறை சார்பு செயலாளர் கிட்டி பல்ராம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது சட்டமன்றம், சபாநாயகர், அமைச்சரவை, எம்.எல்.ஏ.க்களை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாகவும், இதுதொடர்பாக தலைமை செயலாளர், உள்ளாட்சித்துறை செயலாளர், இயக்குனர், சார்பு செயலாளர் ஆகியோர் மீது உரிமை மீறல் புகாரினை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி அளித்தார்.

இந்த புகாரினை துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் தலைமையிலான குழுவுக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து அனுப்பிவைத்தார். இதைத்தொடர்ந்து உரிமை மீறல் குழு சார்பு செயலாளர் கிட்டி பல்ராமுக்கு சம்மன் அனுப்பியது. இதன்படி நேற்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் உரிமைக்குழு முன்பு சார்பு செயலாளர் கிட்டி பல்ராம் ஆஜர் ஆனார்.

கேள்விகளுக்கு பதில்

அப்போது உரிமைக்குழுவின் தலைவரான துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், உறுப்பினர்களான அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், விஜயவேணி, தீப்பாய்ந்தான் ஆகியோரின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவரது பதில்களை உரிமைக்குழு ஆய்வு செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக மேலும் சில அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப உரிமைக்குழு முடிவு செய்துள்ளது.


Next Story