பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம்


பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 Jan 2020 4:15 AM IST (Updated: 15 Jan 2020 3:05 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஆலங்குளம்,

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலும், அலுவலகங் களிலும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஆலங்குளம் அருகே உள்ள சத்திரபட்டி ஆறுமுகம் பழனிகுரு கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, ஆறுமுகம் பழனிகுரு சி.பி.எஸ். இ.மாடர்ன் மேல் நிலைப் பள்ளியில் பள்ளி நிறுவனர் ஆறுமுகம் தலைமையில் பொங்கல் கொண்டாட்டம் நடை பெற்றது. கல்லூரி, பள்ளி தாளாளர் பழனிகுரு முன்னிலை வகித்தார். மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து குலவையிட்டு பொங்கல் விழா கொண்டாடினர். கல்லூரி முதல்வர் சரவணன், பள்ளி முதல்வர் செல்வராஜ், கல்வி ஆலோசகர் சங்கிலிகாளை ஆகியோர்கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் திருவள்ளுவர் நகரிலுள்ள வைமா கிட்ஸ் பள்ளியில் வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வைமா திருப்பதி செல்வன் தலைமையில் விழா நடைபெற்றது. நமது கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக வாசலில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வைமா தாளாளர் அருணா திருப்பதி செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ -மாணவிகளுக்கு பொங்கல் விழா கொண்டாடப்படும் நோக்கத்தையும் அதன் சிறப்புகளையும் எடுத்துக் கூறினார். மேலும் மாணவிகள் கும்மிப் பாடலுக்கு நடனமாடினர். ஏற்பாடுகளை முதல்வர் யமுனாதேவி மற்றும் ஆசிரியைகள் சத்யாதேவி, மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

சித்துராஜபுரம் அனிதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொங்கல் வைத்து விழாவினைகொண்டாடினர். பொங்கல் விழாவில் பள்ளியின் நிறுவனர் ஆறுமுகச்சாமி வடிவேலு, வைரம்மாள் ஆறுமுகச்சாமி, பள்ளியின் தாளாளர் வசந்த் விகாஷ், பள்ளியின் செயலாளர் அதிபன் மற்றும் மோனிகா அதிபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.கலைநிகழ்ச்சி நடந்தது.

ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மேபல்தேவி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

சிவகாசி

சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக உதவியாளர்கள், மாணவ-மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்தனர். பின்னர் பேராசிரியர்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

சிவகாசி ஆனையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமான கிராமநிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்த்னர்.

சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியின் மாணவ பேரவையின் சார்பில் நடந்த விழாவில் கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், கல்லூரியின் செயலர் அருணாஅசோக், கல்லூரி முதல்வர் பழனீஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அனைத்து துறையை சேர்ந்த மாணவிகள் பொங்கல் வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கவிதா செய்திருந்தார். சிவகாசி எஸ்.ஆர்.வி. கல்வி குழுமத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவர் வீரணன் தலைமை தாங்கினார். தாளாளர் பிரதீப்வீரணன் முன்னிலை வகித்தார். இதில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் சண்முகபிரபு செய்திருந்தார். முடிவில் உதவி பேராசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.

சிவகாசி வஸ்த்ரா அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் இயக்குனர்கள் சிவகுமார், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் விழா நடந்தது. பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் ராகவேந்திரன், துணை முதல்வர் லட்சுமி நாராயணன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. இன்டர்நேசனல் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி செயலாளர் ராஜேஸ்குமார், துணை செயலாளர் காசிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக பண்பாட்டு போட்டிகள் நடைபெற்றது. ரங்கோலி, கண்ணாமூச்சி, உறிஅடித்தல், கரும்பு உரித்தல், மிதிவண்டி போட்டி, ஓவியம் வரைதல், மாறுவேடப்போட்டி போன்ற போட்டிகள் மற்றும் கிராமிய கலையாக கும்மி, கரகாட்டம், கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் நடைபெற்றது. கிராமிய வாழ்வை நினைவுறுத்தும் வகையில் குடிசை தோட்டம் அமைக்கப்பட்டு பழங்கால வாழ்வு முறைகள் பற்றி விளக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் மாட்டு வண்டி பயணம் மேற்கொண்டனர்.

அருப்புக்கோட்டை விஸ்வாஸ் கல்வி குழுமத்தின் சார்பில் பொங்கல் விழா மற்றும் விஸ்வாஸ் பஜார் நடைபெற்றது. மாணவ, மாணவிகள் வேட்டி பட்டுபாவாடை அணிந்து வந்து பொங்கலிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பெற்றோர்களுக்கு கோலப்போட்டி, உறியடித்தல் போன்ற போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டது. விஸ்வாஸ் பஜாரில் விதவிதமான உணவு பொருட்களும் ஆடை, அணிகலன்களும் இடம் பெற்றிருந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் பழனிவேல்ராஜன், இயக்குனர் மகாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் சேர்மன் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி சித்ரா குமரேசன், முதன்மை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஆகியோர் தலைமையில் விழா நடந்தது. பள்ளி முதல்வர் முருகதாசன், பள்ளி ஆலோசகர் பாரதி, பள்ளி நிர்வாக அதிகரி அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலர் வகுப்பு மாணவர்கள் முதல் அனைத்து மாணவர்களும் பாரம்பரிய உடை அணிந்து புதுப்பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு கரும்பு, பனங்கிழங்கு, வாழை இலை, மஞ்சள் கிழங்கு, காய்கறிகள் போன்றவற்றை சூரிய பகவானுக்கு படைத்து வணங்கினர். பாலர் வகுப்பு மாணவர்களுக்கு அழகிய கோலங்களில் வண்ணம் தீட்டும் போட்டி நடைபெற்றது.

சாத்தூர்

சாத்தூரில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் நடேசன் தலைமையில் கல்லூரி முதல்வர் முத்துக்குமார் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கோலப்போட்டி நடந்தது. மாணவர்கள் தப்பாட்டத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடினர். இறுதியில் தமிழ்இலக்கியத்துறை பேராசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்

சாத்தூர் ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி சண்முகவேல்ராஜா தலைமையில் குற்றவியல் நீதிபதி சரவண செந்தில்குமார்முன்னிலையில், சாத்தூர் வக்கீல்கள் சங்கம் சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மூத்த வக்கீல் லட்சுமிகாந்தன் வரவேற்று பேசினார், இதில் தலைவர் விநாயகமூர்த்தி, வக்கீல்கள் விஸ்வநாத் பாஸ்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

இலவச ஆடைகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர்கள் விஜயலட்சுமி, சீனிவாசன் ஆகியோர் தலைமையில் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் வரவேற்றார். மேலும் அவர் தனது சொந்த செலவில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஆடைகள் வழங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு துணை தலைவி மகேஸ்வரி, ஆசிரியை ரோஸ்லினாராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தாலுகா அலுவலகம்

ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. தாசில்தார்கள் ஆனந்தராஜ், ரங்கசாமி, சரஸ்வதி மற்றும் அறிவழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை துணை தாசில்தார்கள் பாலகிருஷ்ணன், அருளானந்தம், காளிராஜன், தலைமை அளவர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story