சேனல் கட்டணத்தை குறைத்த டிராய் உத்தரவை எதிர்த்து வழக்கு டி.வி. நிறுவனங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
சேனல் கட்டணத்தை குறைத்த டிராய் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டி.வி. நிறுவனங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துள்ளது.
மும்பை,
சேனல் கட்டணத்தை குறைத்த டிராய் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டி.வி. நிறுவனங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துள்ளது.
சேனல் கட்டணம் குறைப்பு
டி.வி. கட்டண சேனல்களுக்கான மாத சந்தா தொகையில், அதிகபட்ச கட்டணத்தை 19 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக குறைத்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டது. 5 ரூபாயாக இருந்த ஒரு சேனலுக்கான அதிகபட்ச கட்டணம் 19 ரூபாய் வரை உயர்ந்ததாக வாடிக்கையாளர்கள் புகார் தந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிராய் தெரிவித்தது. இனி எந்த டி.வி. சேனலும் 12 ரூபாய்க்கு அதிகமாக சேனலின் கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது. 130 ரூபாய் அடிப்படை கட்டணத்தில் 200 சேனல்கள் வழங்கவேண்டும். இந்த புதிய கட்டணப் பட்டியலை வருகிற 30-ந் தேதிக்குள் வெளியிட டிராய் உத்தரவிட்டு இருந்தது.
ஐகோர்ட்டு மறுப்பு
இந்தநிலையில், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சேனல் கட்டண திருத்த உத்தரவுக்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் தனியார் தொலைக்காட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் திருத்தப்பட்ட கட்டண விதிமுறைகள் தன்னிச்சையான, நியாயமற்ற மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி, ஆர்.ஐ.சக்லா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணை நடந்தது. அப்போது, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த நீதிபதிகள், அந்த மனு மீது பதில் அளிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Related Tags :
Next Story