கோத்தகிரி அருகே, தி.மு.க.-அ.ம.மு.க.வினர் மோதல் - ஒருவர் படுகாயம்


கோத்தகிரி அருகே, தி.மு.க.-அ.ம.மு.க.வினர் மோதல் - ஒருவர் படுகாயம்
x
தினத்தந்தி 16 Jan 2020 10:45 PM GMT (Updated: 16 Jan 2020 5:29 PM GMT)

கோத்தகிரி அருகே தி.மு.க., அ.ம.மு.க.வினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கோத்தகிரி, 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடநாடு ஊராட்சியில் மொத்தம் 9 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 5 வார்டு உறுப்பினர்களாக அ.ம.மு.க கட்சியினரும், 4 வார்டு உறுப்பினர்களாக தி.மு.க.வினரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் மகேந்திர பிரகாஷ் மற்றும் தி.மு.க. சார்பில் வாசுகி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் தலைவரும் வாக்களித்தால் இரு தரப்பினருக்கும் தலா 5 வாக்குகள் கிடைத்த நிலையில் வெற்றியை தீர்மானிக்க குலுக்கல் முறை பின்பற்றப்பட்டது. குலுக்கலில் அ.ம.மு.கவை சேர்ந்த மகேந்திர பிரகாஷ் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவுக்குப்பின் இரு தரப்பினருக்கிடையே விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் துணைத்தலைவர் மகேந்திர பிரகாஷ் மற்றும் அவரது கட்சியினர் கேரடா மட்டத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது தி.மு.க.வை சேர்ந்த சிலர் ஏன் விடுமுறை நாளில் அலுவலகத்திற்கு வந்தீர்கள் என கூறி சத்தம் போட்டு விட்டு சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டு அலுவலகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வாசுகியின் கணவர் புஷ்பா என்கிற குமார் மற்றும் துரை என்கிற தர்மலிங்கம் என சிலர் அங்கு வந்து துணைத்தலைவர் மகேந்திர பிரகாசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் அவர்கள் அனைவரும் சேர்ந்து, மகேந்திர பிரகாசை திடீரென தாக்கியதாக தெரிகிறது.

அப்போது அவர்களை தடுக்க வந்த அ.ம.மு.க. பிரமுகரான கேரடா மட்டத்தை சேர்ந்த சக்திவேலை(வயது 41), குமார், தர்மலிங்கம் மற்றும் சிலர் உருட்டு கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சக்திவேலின் மண்டை உடைந்து ரத்தம் சொட்டியது. இதனை பார்த்த அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிஓடி விட்டனர்.

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த சக்திவேலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, அவரின் தலையில் தையல்கள் போடப்பட்டன. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அ.ம.மு.க. பிரமுகரை தாக்கிய புஷ்பா என்கிற குமார் (48), தர்மலிங்கம் (48) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் முன்விரோத தகராறில் அ.ம.மு.க. பிரமுகர் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் மகேந்திர பிரகாஷ் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story