கடையம் அருகே, கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்தனர்: வியாபாரி சாவு; மனைவி-மகனுக்கு தீவிர சிகிச்சை
கடையம் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்தனர். இதில் வியாபாரி பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி, மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
கடையம்,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சியை அடுத்துள்ள கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 52). இவர் மோட்டார்சைக்கிளில் கடை கடையாக சென்று மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (47). இவர் பொட்டல்புதூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜோதி என்ற மகளும், ஆரோக்கிய ஸ்ரீதர் என்ற மகனும் உள்ளனர். ஜோதி ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். ஆரோக்கிய ஸ்ரீதர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சந்தானம் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரம் சந்தன மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வந்தார். தற்போது கீழஆம்பூரில் புதிதாக வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆரோக்கிய ஸ்ரீதர் ஆன்லைன் வர்த்தகத்திலும் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததில், அதிலும் அவருக்கு கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தானம், லட்சுமி, ஆரோக்கிய ஸ்ரீதர் ஆகிய 3 பேரும் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலையில் உயிருக்கு போராடியபடி 3 பேரும் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தானத்தின் மகள் ஜோதி இதுபற்றி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தானம் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார். லட்சுமி, ஆரோக்கிய ஸ்ரீதர் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையம் அருகே கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story