காணும் பொங்கலை முன்னிட்டு குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
காணும் பொங்கலை முன்னிட்டு குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி,
தைப்பொங்கல் நாள் நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் மறுநாள் மாட்டு பொங்கல் என்ற போதிலும் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் அந்நாளை காணும் பொங்கலாக கொண்டாடி வருகின்றனர்.
காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் செல்வார்கள். தற்போது தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதால் காணும் பொங்கலான நேற்று குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து அருவிகளில் குளித்து விட்டு இங்கு உள்ள பூங்காக்களில் கூடினர்.
குழந்தைகள் பூங்காவில் உள்ள ஊஞ்சல்கள் மற்றும் சறுக்கு விளையாட்டு விளையாடி மகிழ்ந்தனர். குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுகிறது. இன்னும் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் குற்றாலத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிமுத்தாறு
காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று மணிமுத்தாறு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இங்கு வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மணிமுத்தாறு அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சிறிது ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அம்பை தாமிரபரணி ஆறு, அம்பை சின்ன சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் சென்று மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story