திருச்சி அருகே பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற காளையர்கள்
திருச்சி அருகே பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். காளைகள் தூக்கி வீசியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 29 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி,
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடப்பதைபோல திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரியசூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டும் பிரசித்தி பெற்றது. பல ஆண்டுகளாக தொன்று தொட்டு இந்த கிராமத்தில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் வீர விளையாட்டாகும்.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நடக்கும் முதலாவது போட்டியாக ஜல்லிக்கட்டானது பெரியசூரியூரில் நேற்று நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு வாடிவாசல், முக்கிய பிரமுகர்கள் அமரும் மேடை, அதன் முன்புள்ள திடலில் இருபுறமும் இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு பார்வையாளர் மேடையும், ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசல் வழியாக அழைத்து வருவதற்கு இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன.
மருத்துவக்குழு
ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தால், அவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து செல்ல வசதியாக அவசரகால வழி, 108 ஆம்புலன்ஸ்கள், தயார் நிலையில் தீயணைப்பு வாகனம், கால்நடை மருத்துவர்கள், பாதுகாப்புக்கு போலீசார் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 ஜல்லிக்கட்டு காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். காலை 5 மணியில் இருந்தே காளைகளை அதன் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் இடம் அருகே வாகனங்களில் ஏற்றி வந்து இறக்கினர். அக்காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களால் உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர் அடையாள அட்டை சரிபார்த்தல், மாடுபிடி வீரர்கள் 21 வயதுக்கு மேற்பட்டவர்களா? என சரிபார்த்து பெயர் பதிவு செய்தல் ஆகியவை வாடிவாசல் அருகே நடந்தது.
உறுதிமொழி ஏற்பு
காலை 8.35 மணிக்கு வாடிவாசல் முன்பு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். ‘தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்தில் நமது கலாசாரம், பண்பாட்டை பேணி காப்போம் என்றும், விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் விளைவிக்க மாட்டோம் என்றும், அரசு விதிக்குட்பட்டு விளையாடுவோம்’ என்றும் உறுதி ஏற்றனர்.
பின்னர் ஜல்லிக்கட்டை கலெக்டர் எஸ்.சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது)வடிவேல் பிரபு, மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, உதவி கலெக்டர்(திருச்சி) அன்பழகன், திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தனது சிறு வயது மகன் அதுரூத் உடன் வந்து கண்டுகளித்தார். சுமார் 30 நிமிடம் மட்டுமே இருந்த அவர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
மாடா...வீரனா தொட்டுப்பார்
முதலில் வாடிவாசல் வழியாக சூரியூர் ஸ்ரீநற்கடல் கருப்பண்ணசாமி கோவில் காளை, ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் காளை ஆகியவை சீறிப்பாய்ந்து வெளியேறின. கோவில் மாடுகள் என்பதால், அவற்றை மாடுபிடி வீரர்கள் பிடிக்காமல் விட்டு விட்டனர். கோவில் மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரட்டைமலை ஒண்டிகருப்பன் கோவில் மாடு துள்ளாட்டம் போட்டபடி வந்தது.
தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. வீரர்கள் 50 பேர் குழு ஒரு பேட்ஜ் என 8 பேட்ஜ்களாக பிரிக்கப்பட்டு களத்தில் இறக்கப்பட்டனர். ஒவ்வொரு பேட்ஜ்-க்கும் வெவ்வேறு சீருடைகள் மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்பட்டன. காளைகள் வாடிவாசல் வழியாக வெறிப்பிடித்தாற்போல சீறிப்பாய்ந்தன. மாடா...வீரனா.. என போட்டியே நிகழ்த்தப்பட்டது. சில காளைகள் தன்னை ‘தொட்டுப்பார்’ பார்க்கலாம் என வீரர்களை நெருங்க விடாமல் துவம்சம் செய்ய தொடங்கின. மாட்டின் பயமுறுத்தலுக்கு பயந்த காளையர்கள், உயிர் பிழைக்க வாடிவாசல் திடலின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகளில் ஏறி தொற்றிக்கொண்டனர்.
காளையர்களை அச்சமூட்டிய ‘வீரா’
புதுக்கோட்டை மாவட்டம் நரியப்பட்டியை சேர்ந்த ‘வீரா’ என்ற காளையும், சூரியூர் அழகர்சாமி காளையும் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் ஆட்டம் காண்பித்தன. வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் வெளியேறிய காளைகள் மீண்டும் வாடிவாசல் நோக்கி வந்து வீரர்களை நோக்கி சீறிப்பாய்ந்தன. மாடுகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. வாடிவாசல் அருகே நின்று கொண்டு அச்சமூட்டிய காளைகளை, மினிசரக்கு வேனில் திடலுக்குள் வந்த போலீசார் கயிறுகட்டி இழுத்து சென்றனர்.
காளைகளின் கொம்புகளை பிடிக்க கூடாது என்றும், கிட்டி போடுதல் கூடாது என்றும், வாலை பிடிக்கக்கூடாது என்றும் விழாக்குழு சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. வாடிவாசல் வழியாக வந்த காளைகள் சிலவற்றை வீரர்கள் சூழ்ந்து கொண்டு கழுத்தை பிடித்தும், அதன் திமிலை பிடித்தபடியும் அடக்க முயன்றனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் வேட்டி, ஹாட்பாக்ஸ், குத்து விளக்கு, பீரோ, சைக்கிள், தங்கக்காசு, வெள்ளிக்காசு, சில்வர் அண்டா, நாற்காலி, செல்போன், பவர் பேங்க் உள்ளிட்ட பரிசுகளை முன்னாள் எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் உடனடியாக வழங்கப்பட்டன. சில காளைகள், வீரர் களை சுமந்தபடி எல்லைக்கோட்டை தாண்டி ஓடின. அப்போது காளைகளே வென்றதாக அறிவிக்கப்பட்டது.
சில காளைகளை வாடிவாசல் அருகே வீரர்கள் பிடித்தும், அவை சுற்றியபடி ஆட்டம் காண்பித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதுபோன்ற வேளையில் காளைக்கும், வீரர்களுக்கும் என பரிசுகள் வழங்கப்பட்டன. சில காளைளுடன் உரிமையாளர்கள் என்ற பெயரில் 5-க்கும் மேற்பட்டவர்கள் வாடிவாசல் வழியாக வெளியே வந்தனர். அப்போது காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்றாலும், நிபந்தனைகள் மீறப்பட்டதாக கூறி ஜல்லிக்கட்டு குழுவினர் அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்காமல் வெளியேற்றினர். இந்த ஜல்லிக்கட்டில் காளையர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளே அதிகம் ஆகும். காரணம், சிறிய பரிசுகளே வழங்கப்பட்டதால், காளைகளை பிடிக்க அவ்வளவாக வீரர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற கருத்து பரவியது.
தினத்தந்தி சார்பில் பரிசு
நிகழ்ச்சியில் சிறந்த மாடுபிடி வீரர் அயன்புத்தூரை சேர்ந்த பிரசாந்த், சிறந்த மாட்டின் உரிமையாளராக தேர்வு செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் நரியப்பட்டியை சேர்ந்த தனபால் ஆகியோருக்கு தினத்தந்தி சார்பில் பிரிட்ஜ் வழங்கப்பட்டது. தினத்தந்தி வழங்கிய பிரிட்ஜ்-களை திருச்சி உதவி கலெக்டர் அன்பழகன், திருவெறும்பூர் தாசில்தார் ஞானாமிர்தம், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மற்றும் பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு விழாக்கமிட்டியினர் வழங்கினர்.
கொண்டாட்டம்
தினத்தந்தியின் பிரிட்ஜ் பரிசு பெற்ற வீரர் பிரசாந்தை வெற்றிக்களிப்பில், சக மாடுபிடி வீரர்கள் தோளில் தூக்கி சுமந்தபடி ஆர்ப்பரித்தனர். மேலும் பிரிட்ஜையும் அலேக்காக தலைக்குமேல் தூக்கிவைத்து கொண்டாடியபடி சென்றனர். பல ஊர்களில் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு பரிசு பெற்றாலும், தினத்தந்தி வழங்கிய பரிசு பெற்றதில் பெருமை கொள்வதாகவும், இந்த பரிசு என்போன்ற வீரர்களை ஊக்குவிப்பது போல இருப்பதாகவும் வீரர் பிரசாந்த் கூறினார்.
சிறந்த மாட்டுக்கான பரிசு பெற்ற உரிமையாளர் தனபால் கூறுகையில்,‘நான் மாடுபிடி வீரர் என்றாலும், ஜல்லிக்கட்டுக்கென்று, ‘வீரா’ என்று பெயரிட்ட காளையை பராமரித்து வளர்த்து வந்தேன். பல போட்டிகளில் சாதித்தாலும், இன்றைய ஜல்லிக்கட்டு ஆட்டத்தில் வாடிவாசலை விட்டு வெளியேறியதும், அடக்க முயன்ற வீரர்களை நெருங்கவிடாமல் ‘வீரா’ துவம்சம் செய்ய தொடங்கியது. எனவேதான், சிறந்த காளையாக தேர்வானது. என் மாட்டுக்கு நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை செங்குறிச்சியை சேர்ந்த பழனி என்பவர் கொடுத்திருந்தார். ‘வீரா’ சிறந்த காளையாக தேர்வான பெருமை அவரையே சாரும்’ என்றார். மேலும் 9 மாடுகளை அடக்கிய வீரப்பட்டியை சேர்ந்த கார்த்திக் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கினார்.
29 பேர் காயம்
ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தாலும் வாடிவாசல் வழியாக 568 காளைகளும், களத்தில் 334 மாடுபிடி வீரர்களுமே பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு காலை 8.35 மணிக்கு தொடங்கி இடைவிடாது மாலை 3.10 மணிவரை நடந்தது. விழா நிகழ்ச்சிப்படி பிற்பகல் 2 மணிக்குள் முடிவதாக இருந்தது. ஆனால், வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படுகிற ஜல்லிக்கட்டு காளைகள் மிகவும் தாமதமாக வெளியேறியதால் நிகழ்ச்சி மேலும் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வாடிவாசல் திடல் எல்லைக்குள் பார்வையாளர்களாக வந்த சிலர் புகுந்தனர். அவர்களை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசாக தடியடி நடத்தி விரட்டினார்கள்.
ஜல்லிக்கட்டை பார்க்க வந்த பார்வையாளரான திருச்சி உறையூரை சேர்ந்த ஜோதிலட்சுமி(வயது 50), சூரியூர் எல்லையில் மாடுகள் ஓட்டம் பிடித்து வந்தபோது இடையில் சிக்கிக்கொண்டார். இதனால், அவர் படுகாயம் அடைந்தார். மேலும் மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள் மற்றும் வாடிவாசல் எல்லையில் வேடிக்கை பார்த்த பார்வையாளர்கள் தர்மதுரை(27), ஆறுமுகம்(35), திருநாவுக்கரசு(36), ராகுல்(20) உள்ளிட்ட 28 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் மேல்சிகிச்சைக்காக மாடுபிடி வீரர்-1, மாட்டின் உரிமையாளர்-1, பார்வையாளர்-6 என மொத்தம் 8 பேர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை சூரியூர் கரை பட்டயதாரர்கள், விழா ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, சண்முகம், விஜி, ஆறுமுகம், பெரியய்யா, உதயகுமார், ராமையா, ராமராஜ், பாலு குருக்கண்டார், மீனாட்சி சுந்தரம், சங்கிலிமுத்து உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story