எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் விவசாயி பலி வேடிக்கை பார்க்க வந்தபோது பரிதாபம்


எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் விவசாயி பலி வேடிக்கை பார்க்க வந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 16 Jan 2020 11:15 PM GMT (Updated: 16 Jan 2020 8:11 PM GMT)

எருதுவிடும் விழாவின் போது காளை முட்டியதில் வேடிக்கை பார்க்க வந்த விவசாயி பலியானார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ளது வண்ணாத்திப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று எருதுவிடும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக 200-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டன.

இந்த எருதுவிடும் விழாவை காண அஞ்செட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அதேபோல ஏணிபண்டா கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 40) என்ற விவசாயியும் விழாவை காண வந்திருந்தார். விழாவையொட்டி மைதானத்தில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

காளை முட்டியது

இந்தநிலையில் ஒரு காளையை அவிழ்த்து விடுவதற்காக விழாக்குழுவினர் மைதானத்தின் அருகில் அதனை கொண்டு வந்தனர். அப்போது பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் மிரண்டு போன அந்த காளை கயிற்றை அவிழ்த்து கொண்டு அங்கும், இங்குமாக ஆக்ரோஷமாக துள்ளிக் குதித்தபடி ஓடியது. இதனால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தலைதெறிக்க நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது ஆக்ரோஷமாக வந்த காளை, முருகனை துரத்தியது. இதனால் பயந்து போன முருகன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் விடாமல் துரத்திய காளை, முருகனை கொம்பால் முட்டி தூக்கி வீசியது.

விவசாயி சாவு

இதனால் நிலைகுலைந்த முருகன் கீழே விழுந்தார். அப்போது காளை துள்ளி பாய்ந்து அவரது நெஞ்சில் வேகமாக மிதித்தது. அதில் முருகனுக்கு வாயிலும், மூக்கிலும் இருந்து ரத்தம் வடிந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதே போல சித்தாண்டபுரத்தை சேர்ந்த பெருமாள் என்பவரையும் காளை முட்டி தள்ளியது. பலத்த காயம் அடைந்த முருகனையும், பெருமாளையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அஞ்செட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். பெருமாள் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story