பெரியூர் கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


பெரியூர் கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 8:18 PM GMT)

பெரியூர் கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்டது பெரியூர் கிராமம். இங்கு சுமார் 1,500 பேர் வசித்து வருகின்றனர். இங்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் தொட்டியில் நீரேற்றி பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுவது இல்லை என கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி போதுமான தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால் கிராம மக்கள் சிரமப்பட்டனர்.

கடந்த ஒரு வாரமாக போதுமான குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறியும், ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் பெரியூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை அவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி செயலாளர் சண்முகம் மற்றும் ஊர் பிரமுகர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒகேனக்கல் குடிநீர் வழங்கவும், ஆழ்துளை கிணறு மூலம் போதுமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் மற்றும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story