கடலில் குளிக்க, படகு சவாரிக்கு தடை; இன்று காணும்பொங்கல் - பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார்
சென்னையில் இன்று காணும் பொங்கலையொட்டி கடலில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகிறார்கள்.
சென்னை,
மாட்டு பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா மற்றும் இதர இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை பகுதியில் 5 ஆயிரம் போலீசாரும், பெசன்ட்நகர், திருவான்மியூர், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இதர பொழுதுபோக்கு இடங்களில் 5 ஆயிரம் போலீசார் என மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட இருக்கிறார்கள்.
இதுகுறித்து சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பொதுமக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் முக்கியமான இடமாக கருதப்படும் மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலையிலும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையுள்ள மணற்பரப்பிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல, உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவ குழுவினர் மற்றும் மீட்புப்பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. இதுதவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 140 நீச்சல் தெரிந்த நபர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழு பணியமர்த்தப்பட இருக்கிறது. அவர்களுக்கு ‘வாக்கிடாக்கி, மெகா போன், பைனாகுலர்’ ஆகியவை வழங்கப்பட்டு ‘வாட்ஸ்-அப்’ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து ‘பைனாகுலர்’ மூலம் போலீசார் மக்கள் கூட்டத்தை கண்காணித்து ‘மெகா போன்’ மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், கட்டுப்பாட்டு அறைக்கு ‘வாக்கிடாக்கி’ மூலமும், ‘வாட்ஸ்-அப்’ குழுவிலும் உடனுக்குடன் தகவல்கள் வழங்க இருக்கிறார்கள். 3 ‘டிரோன்’ கேமராக்கள் மூலமும், 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் மூலமும், தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கப்படும்.
காணும் பொங்கலையொட்டி இன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்காமல் போலீசார் பணிகளில் ஈடுபட இருக்கிறார்கள். அதேபோல சட்டவிரோதமாக படகு சவாரி நடக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் கண்காணிக்கிறார்கள். ஆயுதப்படையின் குதிரைகளுடன் கூடுதலாக 16 குதிரைகள் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் போலீசார் ரோந்து சென்று திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்க உள்ளனர். மேலும் சிறிய வாகனங்களில் ஒலிபெருக்கி மூலமும் தகுந்த ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள் ஒலிபரப்பப்பட இருக்கிறது.
பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு போலீசார் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். மருத்துவக்குழு அடங்கிய ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த 10 பேர் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட இருக்கிறது. 4 தற்காலிக உயர் கோபுரங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும், கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்க வசதியாக சென்னை போலீசாரால் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரையிலுள்ள 11 காவல் உதவி மையங்கள் மற்றும் எலியட்ஸ் கடற்கரை தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வரும் குழந்தைகளின் கையில், அக்குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோர் செல்போன் எண் ஆகியவற்றை அடையாள அட்டையில் எழுதி கட்டப்படும்.
இதேபோன்று கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலை கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story