தாதரில் அமையும் நினைவகத்தில் அம்பேத்கருக்கு 350 அடி உயர பிரமாண்ட சிலை மந்திரி சபை ஒப்புதல்


தாதரில் அமையும் நினைவகத்தில் அம்பேத்கருக்கு 350 அடி உயர பிரமாண்ட சிலை மந்திரி சபை ஒப்புதல்
x
தினத்தந்தி 17 Jan 2020 5:30 AM IST (Updated: 17 Jan 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

தாதர் இந்துமில்லில் அமையும் அம்பேத்கர் நினைவகத்தில் அவருக்கு 350 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்க மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

மும்பை, 

தாதர் இந்துமில்லில் அமையும் அம்பேத்கர் நினைவகத்தில் அவருக்கு 350 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்க மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

அம்பேத்கர் நினைவகம்

மும்பை தாதரில் உள்ள இந்து மில்லில் சட்டமேதை அம்பேத்கருக்கு மராட்டிய அரசு பிரமாண்ட நினைவகம் கட்டுகிறது. இந்த நினைவகத்துக்கு முந்தைய பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

அந்த இடத்தில் பிரமாண்ட அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது. அம்பேத்கர் நினைவகம் 100 அடி உயரத்திலும், அதற்கு மேல் 250 அடி உயரத்தில் அம்பேத்கர் சிலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் தற்போது மராட்டியத்தில் பதவி ஏற்று இருக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு தாதர் இந்து மில்லில் அமையும் அம்பேத்கர் சிலையின் உயரத்தை மேலும் 100 அடி உயர்த்தி 350 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்து உள்ளது.

திட்ட மதிப்பீடு அதிகரிப்பு

இதன்படி 450 அடி உயரத்தில் நினைவக கட்டிடம் மற்றும் சிலை பிரமாண்டமாக எழுப்பப்பட உள்ளது. மேலும் இதற்கான திட்டமதிப்பீடு ரூ.700 கோடியில் இருந்து ரூ.1,089 கோடியே 95 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மராட்டிய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது.

இதுபற்றி துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறுகையில், “தாதர் இந்து மில்லில் அம்பேத்கர் நினைவகம் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். இந்த நினைவகத்தில் அம்பேத்கர் சிலை மட்டுமின்றி நூலகம், ஆராய்ச்சி மையம் மற்றும் 1,000 பேர் அமரக்கூடிய வகையில் கலையரங்கம் கட்டப்படும். அம்பேத்கர் நினைவக திட்டத்துக்கான அனைத்து அனுமதிகளும் 8 நாளில் பெறப்படும்” என்றார்.

Next Story