ஊழல் புகாரினை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார் - முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்


ஊழல் புகாரினை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார் - முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 17 Jan 2020 12:16 AM GMT (Updated: 17 Jan 2020 12:16 AM GMT)

ஊழல் புகாரினை நிரூபித்தால் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி, 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் டெல்லி சென்று பிரதமர், உள்துறை மந்திரி, ராணுவமந்திரி, நிதி மந்திரி, சாலைப்போக்குவரத்து துறை மந்திரி ஆகியோரை சந்தித்தேன். அப்போது சாலைப்போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரியிடம் விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்ட அழைப்பு விடுத்தேன். மேலும் காலாப்பட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில் பயிற்சி மையத்தை திறந்துவைக்கவும் கேட்டுக்கொண்டேன். மாநில அரசுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவரும் கவர்னர் கிரண்பெடியை மாற்றவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்.

எங்கள் ஆட்சி மீது தனவேலு எம்.எல்.ஏ. கவர்னரை சந்தித்து புகார் கூறியுள்ளார். அப்போது நானும் எனது மகனும் நில அபகரிப்பில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் இதுதொடர்பாக அடுத்தமுறை வந்து புகார் கொடுப்பதாக வாய்மொழியாக கூறியுள்ளார். ஆனால் அதை பத்திரிகைகளுக்கு செய்தியாக கொடுப்பது ஒரு கவர்னருக்கு அழகல்ல.

ஒருவர் புகார் கொடுத்தால் அதை எழுத்துப்பூர்வமாக ஆதாரத்தோடு கொடுக்கவேண்டும். அதன்பின் அந்த புகார் பரிசீலிக்கப்பட வேண்டும். அதில் உண்மை இருந்தால் கவர்னர் அதை காவல்துறைக்கோ, சி.பி.ஐ.க்கோ விசாரணைக்கு அனுப்பவேண்டும். ஆதாரம் இல்லாமல் வாய்மொழியான குற்றச்சாட்டுகளை கவர்னர் பத்திரிகைக்கு கொடுத்தது அவருக்கு நிர்வாகம் தெரியாது என்பதை காட்டுகிறது.

நானோ, எனது மகனோ, எனது குடும்பத்தினரோ நில அபகரிப்பில் ஈடுபட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் நான் எனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். அப்படியில்லை என்றால் என் மீது புகார் தெரிவித்தவரோ, அதை பத்திரிகைகளுக்கு செய்தியாக கொடுத்த கவர்னர் கிரண்பெடியோ பொதுவாழ்க்கையில் இருந்து வெளியில் செல்ல தயாரா?

நான் காங்கிரஸ் கட்சியில் பொதுச்செயலாளராக 14 ஆண்டுகளும், எம்.பி.யாக 23 ஆண்டுகளும், அதில் மத்திய மந்திரியாக 10 ஆண்டுகளும் இருந்துள்ளேன். தற்போது 3½ ஆண்டுகளாக முதல்-அமைச்சராக உள்ளேன். நான் நில அபகரிப்பு, ஊழலில் ஈடுபட்டிருந்தால் மன்மோகன்சிங் மந்திரி சபையில் மந்திரியாக இருந்திருக்கமுடியாது. சோனியாகாந்தி, ராகுல்காந்தியின் நன்மதிப்பினை பெற்றிருக்க முடியாது.

ஆதாரப்பூர்வமற்ற வாய்மொழி குற்றச்சாட்டை பத்திரிகைகளுக்கு கொடுத்ததன் மூலம் கவர்னர் கிரண்பெடிக்கு என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி தெரிகிறது. நான் சி.பி.ஐ.க்கு அமைச்சராக இருந்தவன். என் மீது குற்றச்சாட்டுகள் ஏதேனும் உள்ளதா? என்று கடந்த 3 ஆண்டுகளாக கவர்னரும் தேடுகிறார். நிர்வாகம் தெரியாமல் மக்களை அவமதிக்கும் செயலை அவர் செய்து வருகிறார். அவரது செயல்பாடுகளுக்கு என்.ஆர்.காங்கிரசும், பாரதீய ஜனதாவும் தூபம் போடுகிறது. தனவேலு எம்.எல்.ஏ.வை பின்னால் இருந்து இயக்குவது என்.ஆர்.காங்கிரசும், பாரதீய ஜனதாவும்தான்.

காவல்துறை, ஊர்க்காவல் படையினருக்கு சம்பளத்தை திருத்தப்பட்ட மதிப்பீட்டிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதனை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ, தலைமை செயலாளருக்கோதான் கவர்னர் தெரிவிக்கவேண்டும். ஆனால் அவர் பத்திரிகைகளுக்கு தெரிவித்து விளம்பரம் தேடுகிறார். அவருக்கு நிர்வாகம் தெரியவில்லை. தனவேலு எம்.எல்.ஏ.வின் புகார் தொடர்பான எனது சவாலை கவர்னர் ஏற்கவேண்டும். அவர் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை அசிங்கப்படுத்துவது, அதிகாரிகளை மிரட்டுவது என தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுகிறார்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story