கோவை அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் தாக்கி முதியவர் பரிதாப சாவு


கோவை அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் தாக்கி முதியவர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 18 Jan 2020 4:15 AM IST (Updated: 17 Jan 2020 10:48 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் தாக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மேட்டுப்பாளையம், 

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள திம்மராய பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60). இவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எப்போதும் அந்த பகுதி வழியாக சுற்றி திரிந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் சிறுமுகை வனப்பகுதிக்கு உட்பட்ட லிங்காபுரம் சோதனை சாவடி அருகே ஓடந்துறை பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென்று காட்டுயானைகள் கூட்டம் வந்தது. அவை ராமச்சந்திரனை தாக்குவதற்காக விரட்டின.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக ஓடினார். ஆனால் விடாமல் விரட்டி சென்ற காட்டுயானைகள் ராமச்சந்திரனை பிடித்து துதிக்கையால் தூக்கி வீசியது. மேலும் அவரை காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராமச்சந்திரனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவிக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராமச்சந்திரன் நேற்று பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் அரசின் நிவாரண தொகையாக முதல் கட்டமாக ரூ.50 ஆயிரத்தை ராமச்சந்திரன் குடும்பத்திற்கு வழங்கினார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story