சேரம்பாடி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி


சேரம்பாடி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
x
தினத்தந்தி 18 Jan 2020 4:15 AM IST (Updated: 17 Jan 2020 10:48 PM IST)
t-max-icont-min-icon

சேரம்பாடி அருகே மகளின் திருமண பத்திரிகையை கொடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

பந்தலூர், 

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே கோரஞ்சால் பகுதியை சேர்ந்தவர் சதானந்தன். கனரா வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ராகினி (வயது 56). இவர்களுக்கு சரிதா என்ற மகள் உள்ளார்.

இந்தநிலையில் அடுத்த மாதம் 5-ந் ேததி சரிதாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சதானந்தன் மற்றும் ராகினி ஆகியோர் தடபுடலாக செய்து வந்தனர். மேலும் திருமண பத்திரிகையும் அச்சிடப்பட்டு உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து வந்தனர். சம்பவத்தன்று சதானந்தன் மற்றும் அவருடைய மனைவி ராகினி ஆகியோர் வடுவஞ்சாவல் பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு திருமண பத்திரிகையை கொடுக்க மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

மோட்டார் சைக்கிளை சதானந்தன் ஓட்டினார். பின்னால் ராகினி அமர்ந்து இருந்தார். வடுவஞ்சால் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து ராகினி எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சதானந்தன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், ராகினியை மீட்டு சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ராகினி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மேப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகளின் திருமண பத்திரிகையை கொடுக்க சென்ற போது பெண் ஒருவர் விபத்தில் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story