பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை,
தமிழகத்தில் மாநில அளவில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பயிர் விளைச்சல் போட்டியில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. எனவே பயிர் விளைச்சல் போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து அதிகளவு உயர் விளைச்சல் எடுக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசால் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள ரூ.100 செலுத்தி தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள வருகிற ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கடைசி நாளாகும். பதிவு செய்த விவசாயிகளின் வயலில் வேளாண்மை இயக்குனர் அல்லது அவர்களின் பிரதிநிதி, மாவட்ட கலெக்டர் அல்லது அவர்களின் பிரதிநிதி, அங்கக சான்றளிப்பு துறை உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் அறுவடை செய்து பெறப்படும் மகசூல் விவரங்களின் அடிப்படையில், பரிசு வழங்கப்படும்.
மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் தேர்வு பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-வது பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரமும் தமிழக அரசால் வழங்கப்படும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து பாதுகாத்து வரும் விவசாயிகள் பாரம்பரிய நெல் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள தாங்கள் சாகுபடி செய்துள்ள பாரம்பரிய நெல் ரகம், நடவு தேதி மற்றும் உரிய நில ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story