ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் ஈரோடு ஜல்லிக்கட்டு திருவிழா - 350 காளைகளை அடக்க 300 வீரர்கள்


ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் ஈரோடு ஜல்லிக்கட்டு திருவிழா - 350 காளைகளை அடக்க 300 வீரர்கள்
x
தினத்தந்தி 18 Jan 2020 4:00 AM IST (Updated: 18 Jan 2020 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் ஈரோடு ஜல்லிக்கட்டு திருவிழாவில் 350 காளைகளை அடக்க 300 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து உள்ளனர்.

ஈரோடு, 

ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் 2-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு பெருந்துறை ரோடு பவளத்தாம்பாளையம் ஏ.ஈ.டி. பள்ளிக்கூட மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து உள்ளன. விழாவை முன்னிட்டு நேற்று கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் ஆகியோர் ஜல்லிக்கட்டு மைதானத்தை பார்வையிட்டனர்.

பின்னர் கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு பார்க்க வரும் பார்வையாளர்களுக்காக 6 ஆயிரம் பேர் உட்காரும் வகையில் கேலரி அமைக்கப்பட்டு இருக்கிறது. குடிதண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

கேலரி பார்வையாளர்களை தாங்கும் வகையில் வலிமையானதாக கட்டப்பட்டு இருக்கிறதா? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனை செய்து உள்ளனர். மாடுபிடி தளம் 50 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

காளைகள் அனைத்தும் மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட பரிசோதனையாளர்களால் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படும். காளைகளுக்கு ஊக்க மருந்து சோதனையும் நடைபெறும். மாடு பிடி வீரர்களும் முறையாக மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மைதானத்தில் ஆம்புலன்சு வசதி தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மைதானம் மற்றும் மைதானத்தை சுற்றி 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மைதானத்துக்கு வெளியே கூடும் ரசிகர்கள் ஜல்லிக்கட்டினை தெளிவாக பார்க்கும் வகையில் எல்.ஈ.டி. திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

அவருடன் ஆர்.டி.ஓ. முருகேசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் குழந்தைசாமி, ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மோகனராமகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுதாகர், செயலாளர் டாக்டர் ரகுநாத், பொருளாளர் சக்திவிக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இன்று காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டு திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. 8 மணிக்கு வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் மைதானத்துக்குள் விடப்பட உள்ளன. காளைகளை பிடிக்க மாடு பிடிக்கும் வீரர்கள் 300 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.

காளைகளுடன் காளையர்கள் ஏறுதழுவும் வீர விளையாட்டை பார்க்க கூடும் பார்வையாளர்கள், ஜல்லிக்கட்டு ரசிகர்களுக்காக மைதானத்தில் ‘கேலரி’ (பார்வையாளர் மாடம்) இருக்கைகள் கட்டப்பட்டு உள்ளன.

நிகழ்ச்சியை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

காளைகளை அடக்கும் வீரர்கள், வீரர்களுக்கு அடங்காத காளைகளை வளர்த்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. ‘தினத்தந்தி’ சார்பில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகிறது.

Next Story