குமரி சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் 2 பேர் மீது ‘உபா’ சட்டம் பாய்ந்தது
குமரி சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் 2 பேர் மீது ‘உபா’ சட்டம் பாய்ந்தது.
நாகர்கோவில்,
தமிழக- கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனை சாவடி உள்ளது. இங்கு கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்த களியக்காவிளை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் ஈடுபட்டது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபிக் (28) என்பதும் தெரிய வந்தது. இவர்களை தமிழ்நாடு மற்றும் கேரள மாநில போலீசார் கடந்த 6 நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவர்களுடைய புகைப்படங்களை வெளியிட்டதோடு, அவர் களை பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ.7 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் குமரி மாவட்ட போலீசார் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.
இந்தநிலையில் பயங்கரவாதிகளுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக மெகபூப் பாஷா என்ற இஜாஸ் பாஷாவை கர்நாடக மாநில போலீசார் குண்டலுபேட்டையில் கைது செய்தனர். இவர்தான் பயங்கரவாதிகள் 2 பேருக்கும் துப்பாக்கி வாங்கி கொடுத்தது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரும் கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் உடுப்பி வழியாக மராட்டிய மாநிலத்துக்கு ரெயிலில் தப்பிச்செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து உடுப்பி போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர். தகவல் கிடைத்ததும் தமிழகம் மற்றும் கேரள மாநில போலீசார் உடுப்பி இந்திராலி ரெயில் நிலையத்துக்குச் சென்று, அவ்வழியாகச் சென்ற ரெயிலில் வடமாநிலத்துக்கு தப்ப முயன்ற அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் பிடித்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் கடந்த 15-ந் தேதி இரவு அங்கிருந்து குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் அவர்களை தக்கலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து, போலீசார் விசாரணையை தொடங்கினர். 2 பேரிடமும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் 13 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அவர்கள் 2 பேரும் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் இவர்களுக்கு சில பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. அப்துல் சமீம், தவுபிக் உள்பட 17 பேர் கொண்ட அமைப்பினர் தமிழகம் உள்ளிட்ட தென்தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்தனர். ஆனால் போலீசார் இந்த அமைப்பினரை தொடர்ந்து கைது செய்ததால் போலீசாருக்கும், அரசு நிர்வாகத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு அப்துல் சமீமும், தவுபிக்கும் சேர்ந்து களியக்காவிளை சோதனைச்சாவடியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து அன்று இரவு 9 மணி அளவில் தக்கலை போலீஸ் நிலையத்தில் இருந்து குழித்துறை கோர்ட்டுக்கு ஒரு வேனில் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு, மாஜிஸ்திரேட்டு ஜெயசங்கர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது போலீசார் பயங்கரவாதிகளை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். ஆனாலும் பயங்கரவாதிகள் இருவரையும் 20-ந் தேதி வரை காவலில் வைக்க வேண்டும் என்றும், அவர்களை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி 2 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
வில்சன் கொலை செய்யப்பட்ட போது முதலில் கொலை வழக்கு, ஆயுதச் சட்டம் (துப்பாக்கியை பயன்படுத்தி கொலை செய்தது), கொலைமிரட்டல்ஆகிய பிரிவுகளின்கீழ் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த கொலையில் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது தற்போது ‘உபா‘ சட்டமும் பாய்ந்துள்ளது.
அதாவது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேர் மீதும் புதிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.
இந்த சட்டம் 1967-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமாகும். இடையில் சட்ட திருத்தமும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது அரசு நிர்வாகத்துக்கு எதிராக குற்றச்செயல் செய்வோர்கள் மீது பதிவு செய்யப்படும் சட்டப்பிரிவு இது என்று கூறப்படுகிறது. பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையின்போது அவர்கள் போலீசாரிடம், அரசு நிர்வாகத்துக்கு எதிராகவும், போலீசுக்கு எதிராகவும், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்திலும் வில்சனை கொலை செய்ததாக கூறியிருந்ததால், இந்த சட்டப்பிரிவின்கீழ் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வழக்கமாக விரைவில் ஜாமீன் பெற முடியாத வழக்கில் கைது செய்யப்படும் நபர்கள், போலீசாரால் 90 நாட்களில் (அதாவது 3 மாதத்தில்) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் 91-வது நாளில் சம்பந்தப்பட்ட நபர் ஜாமீன் கோரினால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுவிடும் என்றும், ஆனால் 90 நாளில் போலீசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலும் ‘உபா‘ சட்டப்பிரிவின்கீழ் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு 6 மாதம் வரை (180 நாட்கள் வரை) ஜாமீன் கிடைக்காது என்றும் போலீஸ் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். சில போலீஸ் அதிகாரிகள் இந்த சட்டப்பிரிவை பொறுத்தவரையில் விரைவில் ஜாமீன் பெற முடியாது. ஜாமீன் கொடுப்பதும், கொடுக்காததும் கோர்ட்டு முடிவைப் பொறுத்தது என்று கூறினர்.
Related Tags :
Next Story