ஆரணியில் ராணுவவீரர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5½ லட்சம் நகை, பணம் கொள்ளை


ஆரணியில் ராணுவவீரர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5½ லட்சம் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 18 Jan 2020 3:30 AM IST (Updated: 18 Jan 2020 1:25 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5½ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணி, 

ஆரணி முள்ளிப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 40), ராணுவ வீரர். இவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் வீட்டில் லாவண்யாவின் தாய் கலைச்செல்வி, அண்ணன்கள் பச்சையப்பன், சங்கர் ஆகியோர் குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

சங்கருக்கு வருகிற பிப்ரவரி மாதம் 5-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக திருமண பத்திரிகையை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சின்னகொழப்பலூரில் உள்ள உறவினர் வீட்டில் பத்திரிகை வைப்பதற்காக குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் சென்றனர்.

நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்து 8¾ பவுன் நகைகள், திருமணத்துக்காக வைத்திருந்த ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. நகை, பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5½ லட்சம் இருக்கும்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story