கீரமங்கலம், ஆவுடையார்கோவில், விராலிமலை, பொன்னமராவதியில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்


கீரமங்கலம், ஆவுடையார்கோவில், விராலிமலை, பொன்னமராவதியில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
x
தினத்தந்தி 19 Jan 2020 4:15 AM IST (Updated: 18 Jan 2020 8:13 PM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலம், ஆவுடையார்கோவில், விராலிமலை, பொன்னமராவதியில் சைக்கிள் தினத்தை முன்னிட்டு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

கீரமங்கலம்,

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு தினங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கீரமங்கலத்தில் சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை கிராம ஊராட்சிகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் கொண்டாடப்பட்டது.இந்த நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு, செரியலூர் இனாம் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சைக்கிள் தினத்தை முன்னிட்டு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

சைக்கிள்களின் அவசியம்

சைக்கிள் தினத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொண்டு சைக்கிள்களை ஓட்டினார்கள். சைக்கிள்கள் ஓட்டிய முதியவர்கள் கூறுகையில், 30 வருடங்களுக்கு முன்பு வரை சைக்கிள்கள் போக்கு வரத்துக்கான அவசர வாகனம். திருமணங்களுக்கு சீர் கொடுக்கவும் சைக்கிள்களை தான் கொடுத்தார்கள். அப்போது அனைத்து வீடுகளிலும் சைக்கிள்கள் இருக்கும். அதனால் எவ்வளவு தூரம், பாரம் என்றாலும் சைக்கிளில் செல்வது வழக்கமாக இருந்தது. அதனால் உடல் ஆரோக்கியம் காக்கப்பட்டது. அதன் பிறகு நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் மோட்டார் வாகனங்கள் வந்த பிறகு சைக்கிள்கள் குறைந்துவிட்டது. அதனால் தான் இன்றைய தலைமுறைகளுக்கு உடல் ஆரோக்கியம் குறைந்து வீட்டுக்குள்ளேயே சைக்கிளை நிறுத்தி வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் உடற்பயிற்சி என்கிறார்கள். இன்னும் முதியவர்கள் தான் சைக்கிள்களை மறக்காமல் வைத்திருக்கிறோம், என்றனர்.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் திருப்பெருந்துறை ஊராட்சியில், சைக்கிள் தினத்தையொட்டி சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சைக்கிள் ஊர்வலத்தை ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தில்குமரன், சுந்தர பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திராராஜ மாணிக்கம், துணைத் தலைவர் பிரியாசத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரப்பன், பெரியசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளிலும் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட்டது.

விராலிமலை

விராலிமலை ஊராட்சி சார்பில் சைக்கிள் தினத்தை முன்னிட்டு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விராலிமலை ஊராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய சைக்கிள் ஊர்வலத்தை விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ரவி (கிராமஊராட்சி) ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலமானது கடைவீதி, சுங்கச்சாவடி, எம்.ஜி.ஆர். நகர் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி அலுவலகத்தில் நிறைவுபெற்றது. இதில் விராலிமலையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள், ஒன்றிய கவுன்சிலர் மணி, துணைத்தலைவர் தீபன் சக்கரவர்த்தி, வெல்கம்மோகன், ஊராட்சி செயலாளர் புருசோத்தமன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி

பொன்னமராவதி ஒன்றியம், வாழைக்குறிச்சி ஊராட்சியில் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மதியரசன் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துணைத் தலைவர் ஆறுமுகம், ஊராட்சி செயலாளர் முருகவேல் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பொன்னமராவதி ஒன்றியத்தில் மேலைச்சிவபுரி, தொட்டியம்பட்டி, கொப்பனாப்பட்டி, வார்ப்பட்டு, கண்டியாநத்தம், அம்மன்குறிச்சி பகுதிகளில் மாந்தக்குடிப்பட்டி ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், வாராப்பூர் ஊராட்சியில் தலைவர் மலர்விழி நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலமானது அந்த கிராமங்களை சுற்றி ஊர்வலமாக வந்து அந்தந்த ஊராட்சி அலுவலகம் முன்பு நிறைவுற்றது. இதில் பொதுமக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story