கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவுடன் எடியூரப்பா ஆலோசனை வெளிநாடு சென்றுவிட்டு டெல்லி வருமாறு அறிவுரை


கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவுடன் எடியூரப்பா ஆலோசனை வெளிநாடு சென்றுவிட்டு டெல்லி வருமாறு அறிவுரை
x
தினத்தந்தி 19 Jan 2020 5:30 AM IST (Updated: 18 Jan 2020 10:21 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு, 

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அப்போது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு டெல்லி வருமாறு எடியூரப்பாவிடம் அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார்.

அமித்ஷாவை வரவேற்றனர்

பா.ஜனதா தேசிய தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா நேற்று ஒரு நாள் பயணமாக கர்நாடகம் வந்தார். காலை 12 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கிய அமித்ஷாவை முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள், பா.ஜனதா நிர்வாகிகள் வரவேற்றனர்.

அதன் பிறகு அமித்ஷா, கத்ரிகுப்பே வித்யாபீடத்தில் உள்ள மறைந்த பெஜாவர் மடாதிபதி விஸ்வேசுவரதீர்த்த சுவாமியின் சமாதியில் அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது முதல்-மந்திரி எடியூரப்பாவும் உடன் இருந்தார்.

மந்திரிசபை விரிவாக்கம்

அதைத்தொடர்ந்து ஜெயநகர் 5-வது பிளாக்கில் பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜனதா எம்.பி.யான தேஜஸ்வி சூர்யாவின் அலுவலகத்தை அமித்ஷா திறந்து வைத்தார். இதில் எடியூரப்பா, மந்திரிகள் ஆர்.அசோக், சி.டி.ரவி மற்றும் மறைந்த மத்திய மந்திரி அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினி அனந்தகுமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அமித்ஷா வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் பயணம் செய்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பெங்களூருவில் பல்வேறு சாலைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.

நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் திண்டாடினர். அதன் பிறகு மாலை 4 மணியளவில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா உப்பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் முதல்-மந்திரி எடியூரப்பாவும் பயணம் செய்தார். பெங்களூருவில் இருந்து உப்பள்ளி வரையிலான பயணத்தின்போது, கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும், யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது, மந்திரிசபையில் இருந்து யாரை நீக்குவது என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அனுமதி வழங்கவில்லை

எடியூரப்பா, கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் மந்திரி பதவி வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், தோல்வி அடைந்த எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோரை எம்.எல்.சி.யாக நியமித்து அவர்களுக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதை பொறுமையாக கேட்டுக்கொண்ட அமித்ஷா, நீங்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு டெல்லி வாருங்கள். அப்போது மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தலாம் என்றும், அதுவரை மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டாம் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அமித்ஷா ஒப்புதல் வழங்கினால் உடனே அமல்படுத்த எடியூரப்பா திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு அமித்ஷா அனுமதி வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிப்போய் வருவதால், எம்.எல்.ஏ.க்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story