திண்டுக்கல் அருகே டேங்கர் லாரி மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி-11 பேர் படுகாயம்


திண்டுக்கல் அருகே டேங்கர் லாரி மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி-11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Jan 2020 11:00 PM GMT (Updated: 18 Jan 2020 5:15 PM GMT)

திண்டுக்கல் அருகே டேங்கர் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

சின்னாளபட்டி,

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையின் இருபுறமும் செல்லும் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சாலையின் மையப்பகுதியில் செடிகள் வளர்க்கப்படுகிறது. இவற்றை நெடுஞ்சாலை துறையினர் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். அதன்படி நேற்று திண்டுக்கல் அருகே வெள்ளோடு பிரிவு நான்கு வழிச்சாலையின் மையப்பகுதியில் உள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி நடந்தது. இந்த பணியில் நிலக்கோட்டையை அடுத்த பள்ளப்பட்டியை சேர்ந்த கோவிந்தன் (வயது 58) என்ற தொழிலாளி ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த பஸ் கண் இமைக்கும் நேரத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த டேங்கர் லாரி மீது பலமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் பஸ் மோதியதில் டேங்கர் லாரி சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்புச்சுவர் மீது ஏறி நின்றது.

இந்த விபத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த கோவிந் தன் படுகாயம் அடைந்தார். இதேபோல் அரசு பஸ் டிரைவரான சேலம் மாவட்டம் செங்கப்பள்ளியை சேர்ந்த ரவி (52) மற்றும் பஸ்சில் பயணம் செய்த 10 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விபத்தில் காயமடைந்த டிரைவர் உள்பட 12 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால் அங்கு அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தன் இறந்துபோனார். மற்ற 11 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story