கன்னங்குறிச்சி பகுதியில் திருட்டு சம்பவம் அதிகரிப்பு: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேர் பணி இடமாற்றம் + "||" + Increase in theft in Kannangurichi: Four people including Special Sub-Inspectors transferred
கன்னங்குறிச்சி பகுதியில் திருட்டு சம்பவம் அதிகரிப்பு: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேர் பணி இடமாற்றம்
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் திருட்டு சம்பவம் அதிகரிப்பு காரணமாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேரை பணி இடமாற்றம் செய்து கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கன்னங்குறிச்சி,
சேலம் மாநகர பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
இந்த நிலையில் சேலம் கன்னங்குறிச்சியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை, 3 மடிக்கணினி ஆகியவை திருட்டு போனது.
மேலும் கன்னங்குறிச்சி பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதாகவும், இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த பகுதி பொதுமக்கள் போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தனர்.
அதன்பேரில் கன்னங்குறிச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், விஷ்ணுராம், ஏட்டுக்கள் பாலசுப்பிரமணியன், பிரித்விராஜ் ஆகிய 4 பேரைஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்து கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
உத்தரவு
இதைத்தொடர்ந்து மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் களையும் நேரில் அழைத்து, அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறும்போது, மாநகரில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை கண்காணிக்க தனிபிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறினார்.