ரூ.25 லட்சம் ரொக்கமும் சிக்கியது நடிகை ரஷ்மிகா குடும்பத்தினர் கணக்கில் காட்டாத சொத்து ரூ.3.94 கோடி


ரூ.25 லட்சம் ரொக்கமும் சிக்கியது நடிகை ரஷ்மிகா குடும்பத்தினர் கணக்கில் காட்டாத சொத்து ரூ.3.94 கோடி
x
தினத்தந்தி 19 Jan 2020 5:00 AM IST (Updated: 19 Jan 2020 12:02 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ரஷ்மிகாவின் வீடு, திருமண மண்டபத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.25 லட்சம் ரொக்கம் சிக்கியுள்ளது.

பெங்களூரு, 

நடிகை ரஷ்மிகாவின் வீடு, திருமண மண்டபத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.25 லட்சம் ரொக்கம் சிக்கியுள்ளது. அத்துடன் அவரது குடும்பத்தினர் ரூ.3.94 கோடி சொத்துகளை கணக்கில் காட்டவில்லை என்பது இந்த சோதனை மூலம் அம்பலமாகியுள்ளது.

நடிகை ரஷ்மிகா வீட்டில் சோதனை

தெலுங்கு பட உலகில் முன்னணி நட்சத்திரமாக நடிகை ரஷ்மிகா மந்தனா உள்ளார். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவில் உள்ள குக்குலூரு ஆகும். தற்போது இவர் தமிழ், கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார்.

இவர் திரைப்படத் துறைக்கு வந்து 4 வருடங்கள் தான் ஆகிறது. இருப்பினும் அவர் ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாகவும், வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வருமானவரித் துறைக்கு புகார்கள் சென்றன.

ரூ.25 லட்சம் ரொக்கம் சிக்கியது

இதைதொடர்ந்து வருமான வரித் துறையை சேர்ந்த 10 அதிகாரிகள் குக்குலூருவில் உள்ள ரஷ்மிகாவின் வீட்டில் கடந்த 16-ந்தேதி காலை 7.30 மணிக்கு சோதனையை தொடங்கினர். இந்த சோதனை விடிய, விடிய தொடர்ந்து 2-வது நாளும் நீடித்தது. இந்த சோதனை நடிகை ரஷ்மிகாவுக்கு சொந்தமான விராஜ்பேட்டையில் உள் செரினிட்டி ஹால் ஐஷாராமி திருமண மண்டபத்திலும் நடந்தது.

29 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் திருமண மண்டபத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.25 லட்சம் சிக்கியதாகவும், அதனை வருமானவரித் துறையினர் கைப்பற்றி எடுத்து சென்றதாகவும் தெரிகிறது.

ரூ.1½ கோடிக்கு வரி செலுத்தவில்லை

அத்துடன் சொகுசு பங்களா, காபி தோட்டம், நிலம் உள்பட பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருப்பதும் தெரியவந்தது. ரூ.3.94 கோடி சொத்துகளை நடிகை ரஷ்மிகா குடும்பத்தினர் கணக்கில் காட்டவில்லை என்பதும், ரூ.1½ கோடி வருவாய்க்கு வரி செலுத்தவில்லை என்பதும் இந்த சோதனையில் தெரியவந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதவிர நடிகை ரஷ்மிகா பெயரில் 2 பான்கார்டுகள் இருப்பதும், ஆனால் வருமானவரி ஆவணங்கள் தாக்கலில் ஒரு பான்கார்டு எண் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.

நாளை மறுநாள் ஆஜராக உத்தரவு

வருமான வரி சோதனையில் சிக்கிய ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பற்றி உரிய விளக்கம் அளிக்க வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மைசூருவில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகை ரஷ்மிகா, அவரது தந்தை மதன் மந்தனா, தாய் சுமன் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

வருமானவரி சோதனையால் நடிகை ரஷ்மிகா தந்தை அதிர்ச்சி
அனைத்தையும் இழந்துவிட்டேன் என உருக்கம்

ருமானவரித் துறை சோதனையால் ரஷ்மிகாவின் தந்தை மதன் மந்தனா கடும் அதிர்ச்சியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் தனது உறவினர்களிடம் வருமானவரி சோதனையால் நான் எனது மரியாதை உள்ளிட்ட அனைத்தையும் இழந்துவிட்டதாகவும், சிலர் பொய்யான தகவலை கூறியதால் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதாகவும் மனவருத்தத்துடன் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வருமானவரித் துறையினர் உத்தரவிட்டு உள்ளனர். நாங்கள் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிப்போம் என்று மதன் மந்தனா கூறியதாக சொல்லப்படுகிறது.

அத்துடன் திருமண மண்டபத்தில் சிக்கிய பணம் என்னுடையது அல்ல. அது திருமண வீட்டார் ஒருவர் திருமண மண்டபத்திற்காக கொடுத்த முன்பணம். நான் சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பவன் அல்ல என்று உருக்கமாக கூறியதாக தெரிகிறது.

Next Story