மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டில் சிறுமி உள்பட 16 பேர் காயம்


மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டில் சிறுமி உள்பட 16 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Jan 2020 11:00 PM GMT (Updated: 18 Jan 2020 6:47 PM GMT)

மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் சிறுமி உள்பட 16 பேர் காயமடைந்தனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலய திடலில், புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் காளைகளும், ஒரு குழுவிற்கு 80 பேர் வீதம் ஏராளமான வீரர்களும் களமிறங்கினர். ஜல்லிக்கட்டை மணப்பாறை தாசில்தார் தமிழ்கனி, போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் செவலூர் சின்னாக்கவுண்டரின் காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளை களத்தில் சிறிது நேரம் நின்று விளையாடி, தன்னை நெருங்கி வந்த வீரர்களை விரட்டி அடித்தது. இதைத்தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டன.

இதில் சில காளைகள் வீரர்களை கொம்பினால் முட்டித்தூக்கி பந்தாடின. சில காளைகள், அடக்கிய வீரர்களை புரட்டியெடுத்தன. பல காளைகள் மின்னல் வேகத்தில் எல்லைக்கோட்டை கடந்து சென்றன. இருப்பினும் வீரர்கள், பல காளைகளின் திமிலை இறுகப்பற்றி அணைத்து வெற்றி வாகை சூடி அசத்தினர். வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் பீரோ, சைக்கிள், கட்டில், சில்வர் பாத்திரங்கள், தங்க மோதிரம், வெள்ளி நாணயம், குக்கர், ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

16 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டில் 597 காளைகளும், 359 வீரர்களும் பங்கேற்றனர். காளைகள் முட்டித் தள்ளியதில் பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த வினோபா(வயது 6) என்ற சிறுமி உள்பட 16 பேர் காயமடைந்தனர். இதில் ஜல்லிக்கட்டு திடலில் இருந்து காளைகள் வெளியேறும் பகுதியின் அருகே வினோபாவை, அவருடைய தாய் தூக்கிச்சென்றபோது, அந்த வழியாக வந்த காளை வினோபாவை கொம்பால் முட்டியதில் அவளுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் மணப்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். வினோபா உள்பட 7 பேர் மேல்சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி ஆகியோர் பார்வையிட்டனர். ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மேற்பார்வையில் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர், கால்நடை மருத்துவக்குழுவினர் ஆகியோர் நிபந்தனைகளின் படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணித்தனர். இதேபோல் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மேற்பார்வையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டு காலை 9.10 மணிக்கு தொடங்கி மாலை 4.35 மணிக்கு நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டை காண ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டதால் பொத்தமேட்டுப்பட்டி பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.


Next Story