அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் இல்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு
மதுரை மாவட்ட அ.தி.மு.க. வில் கோஷ்டி பூசல் இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
திருமங்கலம்,
மதுரை-திருமங்கலம் மெயின்ரோட்டில் ஜவகர்நகர் பகுதியில் பாண்டியன் நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலைய திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர்ராஜூ, ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு விற்பனையை தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:-
நிர்வாகத்திறனில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழக முதல்-அமைச்சரால் சிறப்பாக செயல்பட முடியுமா என கேள்வி எழுப்பியவர்கள் இவரால்தான் சிறப்பாக செயல்பட முடியும் என பேசுகின்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உள்பட பல்வேறு உரிமைகளை மீட்டவர் கூட்டுறவுத்துறை அமைச்சர் தான். இளம் வயதில் தாம் சிந்தித்ததை தற்போது சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மக்களுடன் தொடர்புடைய வருவாய் மற்றும் கூட்டுறவுத்துறை மதுரையில் உள்ளது மிகவும் பெருமை.
எனக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ, ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது என நினைப்பவர்கள் நிச்சயம் ஏமாறுவார்கள். அப்படி மனக்கசப்பு ஏதும் இல்லை. நாங்கள் இணைந்து மதுரை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம். நிர்வாக காரணங்களால்தான் நானும் கூட்டுறவுத்துறை அமைச்சரும் சில விழாக்களில் கலந்து கொள்ள முடிவதில்லை. மற்றபடி எந்த மனக்கசப்பும் இல்லை. அ.தி.மு.க.வில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை. இவ்வாறு பேசினார்.
பின்னர் பேசிய அமைச்சர் செல்லூர்ராஜூ, தன் மனதில் உள்ளதை அப்படியே உதயகுமார் பேசினார் எனத் தெரிவித்தார். இந்த விழாவில் கலெக்டர் வினய், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ராஜா, பதிவாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story