உசிலம்பட்டி அருகே பயங்கரம்: ஊராட்சி தலைவருக்கு போட்டியிட்டவர் கொலை: எதிர்த்து நின்றவர் உள்பட 3 பேர் கைது


உசிலம்பட்டி அருகே பயங்கரம்: ஊராட்சி தலைவருக்கு போட்டியிட்டவர் கொலை: எதிர்த்து நின்றவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Jan 2020 4:45 AM IST (Updated: 19 Jan 2020 1:05 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் கொலை செய்யப்பட்டார். அவரை எதிர்த்து நின்ற 3 பேரை இதுதொடர்பாக போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழுமலை அருகே உள்ள உத்தப்புரதை சேர்ந்தவர் முத்தையா(வயது52). விவசாயியான இவர் அந்த ஊரின் சமுதாய பிரமுகராகவும் இருந்தார். இவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் உத்தப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவரது சமுதாயத்தை சார்ந்த பால்ராஜ்(50) என்பவரும் மனுதாக்கல் செய்தார். அதே போன்று மேலப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரும் போட்டியிட்டார்.

ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2 பேரும் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தேர்தலுக்காக ரூ.15ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும் அந்த பணத்தை கொடுத்தால் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாகவும் முத்தையா கூறினாராம்.

இதனைத்தொடர்ந்து பால்ராஜ், முத்தையாவிற்கு 15 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் முத்தையா தனது வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. வேட்பு மனுவை வாபஸ் பெறும்தேதி முடிந்து விட்டது, எனவே மனுவை வாபஸ் பெறமுடியவில்லை என முத்தையா தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. எனினும் தேர்தலில் தனக்கு வாக்கு சேகரிக்காமல் பால்ராஜுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் தேர்தல் முடிவில் மேலப்பட்டியை சேர்ந்த முருகன் வெற்றி பெற்றார்.

இதனால் முத்தையா மீது பால்ராஜ் ஆத்திரம் அடைந்தார். நேற்று அவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் முத்தையாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். நான் தோல்வி அடைந்ததற்கு நீயும் ஒரு காரணம், எனவே என்னிடம் பெற்ற பணத்தை திருப்பிக்கொடு எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் முத்தையா மயக்கமடைந்துள்ளார். உடனே அவரை உறவினர்கள் எழுமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை டாக்டர் பரிசோதனை செய்த போது, முத்தையா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இது குறித்து முத்தையாவின் சகோதரர் முத்துராஜ் எழுமலை போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து முத்தையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த கொலை தொடர்பாக பால்ராஜ், சோமு(51), நாச்சிமுத்து(65) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட சிலரை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட முத்தையாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தனியார் கல்லூரியிலும், இளைய மகள் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.

Next Story