டிரான்ஸ்பார்மரில் பழுதுநீக்கியபோது மின்சாரம் தாக்கியதில் ஊழியர் பரிதாப சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்
டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்கியபோது மின்சாரம் தாக்கியதில் மின்துறை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி,
டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்கியபோது மின்சாரம் தாக்கியதில் மின்துறை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்துறை ஊழியர்
புதுச்சேரி நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் புதுச்சேரி மின்துறையில் முருங்கப்பாக்கம் வயர்மேனாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு தயாநிதி என்ற மகனும், ஷாலினி, பவித்ரா என்ற மகள்களும் உள்ளனர். அய்யப்பன் நேற்று காலை வழக்கம்போல பணிக்கு சென்றார்.
நைனார்மண்டபம் சுதானா நகர் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் (மின்மாற்றி) உயர்மின் அழுத்த பாதையில் பழுது காரணமாக காலை 10 மணி அளவில் மின்தடை ஏற்பட்டது.இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மின் துறைக்கு புகார் அளித்தனர்.
அதன்பேரில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய வயர்மேன் அய்யப்பனுடன், மற்றொரு ஊழியரான இளங்கோவும் உடன் சென்றார். அப்போது அய்யப்பன் டிரான்ஸ்பார்மரில் ஏறி உயர் மின்அழுத்த பாதையில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.
அவருக்கு தேவையான மின் உபகரணங்களை இளங்கோ கீழே நின்றபடி வழங்கினார்.
பரிதாப சாவு
எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியதில் அய்யப்பன் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் படுகாயமடைந்தார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அவரை இளங்கோ மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அய்யப்பன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதையடுத்து புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அய்யப்பனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சாலை மறியல்
இந்தநிலையில் பணியின்போது உயிரிழந்த அய்யப்பன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நிவாரண நிதி வழங்க வேண்டுமென வலியுறுத்தி புதுச்சேரி-கடலூர் சாலை நைனார்மண்டபம் பகுதியில் அவருடைய உறவினர்கள் நேற்று மாலை சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மின்துறை அதிகாரிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அய்யப்பனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னதாக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அரசு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி அய்யப்பனின் உறவினர்கள் அவரது உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர். அதையடுத்து மின்துறை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்துறை ஊழியர் அய்யப்பன் இன்னும் ஓரிரு மாதங்களில் ஓய்வுபெற உள்ளதாகவும் உடன் பணிபுரிந்தவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story