போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடக்கிறது
மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைக்கிறார்.
சிவகங்கை,
போலியோ சொட்டு மருந்து வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் பேசியதாவது:- போலியோவை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிவகங்கையில் நடைபெற உள்ளது. இதனை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைக்கிறார்.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் என 1,192 நிரந்தர மையங்களிலும், 61 நடமாடும் மையங்களிலும், 17 பஸ்நிலையங்களிலும் நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 33 ஆயிரத்து 131 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.
இதற்கு முன்னேற்பாடு பணியாக போலியோ சொட்டு மருந்தின் குளிர்பதன நிலையை பாதுகாக்க தடையில்லா மின்சாரம் வழங் கப்பட உள்ளது. மேலும் மருந்து பெட்டிகளை சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு கொண்டு செல்ல அனைத்துத் துறையை சார்ந்த வாகனங்களை ஒதுக்கித் தரவும், சொட்டு மருந்து மையத்துக்குத் தேவையான இட வசதி செய்து தரவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் பொது சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, ஊட்டச்சத்துத் துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை மற்றும் பிறதுறைகளைச் சேர்ந்த 5 ஆயிரத்து 500 பேர் பணியாற்ற உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் போலியோ சொட்டு மருந்து முகாம்களை பயன்படுத்தி தங்களின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயை முற்றிலும் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story