நிலக்கடலை மகசூலை அதிகரிக்க நுண்ணூட்ட கலவையை பயன்படுத்தலாம் - வேளாண் அதிகாரி தகவல்


நிலக்கடலை மகசூலை அதிகரிக்க நுண்ணூட்ட கலவையை பயன்படுத்தலாம் - வேளாண் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 19 Jan 2020 3:30 AM IST (Updated: 19 Jan 2020 1:33 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கடலை மகசூலை அதிகரிக்க நுண்ணூட்ட கலவையை பயன்படுத்தலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

சிவகங்கை, 

வேளாண்மைத்துறையின் அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள், செயல்விளக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. பண்ணைப்பள்ளிகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாதிரி பண்ணையில் பயிர்கள் விதைப்பு முதல் அறுவடை வரை தேவையான தொழில்நுட்ப முறைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, நிலக்கடலை பண்ணைப்பள்ளியில் பயிற்சி வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதையொட்டி மீனாட்சிபுரத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலக்கடலை மாதிரி பண்ணையில் 25 விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த முதல் பண்ணைப்பள்ளி பயிற்சி நடத்தப்பட்டது. இதில் உதவி பேராசிரியர் விமலேந்திரன் பண்ணைப்பள்ளி தொழில்நுட்பங்கள் பற்றி பேசினார்.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் பேசியதாவது:- நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், ஊடுபயிராக துவரை, உளுந்து, தட்டைப்பயறு உள்ளிட்ட பயிர்களும், சுற்றுப்பயிராக ஆமணக்கு பயிரும் பயிரிடலாம். ஊடுபயிராக வேறு பயிர்கள் நிலக்கடலையில் பயிரிடும் போது சிவப்பு கம்பளி பூச்சி தாக்குதல் கணிசமாக குறைக்கப்படுகிறது. மேலும், இனக்கவர்ச்சிப்பொறி ஏக்கருக்கு 5 வைப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகளை அழிக்கலாம்.

நிலக்கடலையில் பூக்கும் மற்றும் காய்க்கும் திறனை அதிகப்படுத்துவதற்கும், மண்ணில் நுண்ணூட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள நுண்ணூட்ட கலவையை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் பயன்படுத்தி நிலக்கடலை மகசூலை அதிகரித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சியில் விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. உழவன் செயலியின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், காணொலி காட்சி மூலம் பண்ணைப்பள்ளிகள் குறித்த தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.இதில் வேளாண்மை உதவி இயக்குனர் தங்கப்பாண்டியன், வேளாண்மை அலுவலர்கள் பரமேஸ்வரன், சதீஸ், உதவி வேளாண்மை அலுவலர் பானுப்பிரியா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சதீஷ் மற்றும் நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story