தேங்காப்பட்டணம் பகுதியில் தீயணைப்புத்துறை கமாண்டோ வீரர்களுக்கு படகு இயக்கும் பயிற்சி


தேங்காப்பட்டணம் பகுதியில் தீயணைப்புத்துறை கமாண்டோ வீரர்களுக்கு படகு இயக்கும் பயிற்சி
x
தினத்தந்தி 19 Jan 2020 4:15 AM IST (Updated: 19 Jan 2020 2:18 AM IST)
t-max-icont-min-icon

தேங்காப்பட்டணம் பகுதியில் தீயணைப்புத்துறை கமாண்டோ வீரர்களுக்கான படகு இயக்கும் பயிற்சியை தீயணைப்புத்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்,

தேங்காப்பட்டணம் கடற்கரையும், தாமிரபரணி ஆறும் கலக்கும் பொழிமுகத்தில் இருந்து நீர் வழிப்பாதையாக மங்காடு வரை தீயணைப்புத்துறை கமாண்டோ வீரர்களுக்கு படகு இயக்கும் பயிற்சி நேற்று நடந்தது. இந்த பயிற்சியை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

அப்போது அவரும் படகிலேயே மங்காடு பாலம் வரை சென்று ஆய்வு செய்தார்.

தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

அதன்பிறகு மழை வெள்ளக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் எவ்வாறு பொதுமக்களை காப்பாற்றுவது? பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கிடைக்கும் பொருட்களை மிதவைகளாக உருவாக்கி எவ்வாறு தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது? வெள்ளத்தின் போது மறுகரையில் சிக்கித் தவிப்பவர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் மீட்பது எப்படி? என்பது பற்றிய தீயணைப்பு வீரர்களின் ஒத்திகையும் நடந்தது.

இதையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பார்வையிட்டார். சிறப்பாக ஒத்திகை பயிற்சி மேற்கொண்ட தீயணைப்பு வீரர்களை அவர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு, உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் துரை, குழித்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story