பண்ருட்டியில் மதுபாட்டிலால், டீ மாஸ்டர் குத்திக் கொலை நண்பர் வெறிச்செயல்


பண்ருட்டியில் மதுபாட்டிலால், டீ மாஸ்டர் குத்திக் கொலை நண்பர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 18 Jan 2020 11:00 PM GMT (Updated: 18 Jan 2020 10:19 PM GMT)

பண்ருட்டியில் மதுபாட்டிலால் டீ மாஸ்டர் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி,

பண்ருட்டி லிங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சீனு(வயது 48). டீ மாஸ்டர். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் சதீஷ்(27) என்பவரும் நண்பர்கள். இவர் சென்னையில் பெயிண்டராக உள்ளார் பொங்கலை கொண்டாடுவதற்காக சதீஷ் சொந்த ஊருக்கு வந்திருந்தார். காணும் பொங்கல் பண்டிகையை நேற்று முன்தினம் இருவரும் மது குடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி சீனு, தன்னிடம் இருந்த பணத்தை சதீஷிடம் கொடுத்து 2 குவார்ட்டர் மதுபாட்டில் வாங்கி வருமாறு கூறியுள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சதீஷ், டாஸ்டாக் கடைக்கு சென்று 2 மதுபாட்டில்களை வாங்கி வந்தார்.

மது குடித்ததால் தகராறு

இதனிடையே சீனு பக்கத்து தெருவிற்கு சென்றிருந்தார். 2 மதுபாட்டில்களுடன் படைவீட்டம்மன் வீதியில் உள்ள ஒரு சலூன் கடை முன்பு வெகுநேரமாக காத்திருந்த சதீஷால் மதுபாட்டில்களை பார்த்துக்கொண்டே இருக்க முடியவில்லை. அதில் ஒரு மதுபாட்டிலை மட்டும் குடிக்க முடிவு செய்தார். அதன்படி ஒரு மதுபாட்டிலை திறந்து அவர் குடித்தார். போதை தலைக்கு ஏறியதும், மற்றொரு மதுபாட்டிலையும் திறந்து குடித்து விட்டார்.

சிறிது நேரத்தில் சீனு, மதுகுடிக்க ஆவலுடன் அங்கு வந்தார். அங்கு சதீஷ், மதுபோதையில் படுத்திருந்தார். அருகில் 2 காலி மதுபாட்டில்கள் கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனு, தனக்கு தராமல் 2 பாட்டில் மதுவையும் ஏன் குடித்தாய்? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவரும் கைகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

கொலை

இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ், அங்கு கிடந்த ஒரு மதுபாட்டிலை எடுத்து உடைத்து, சீனுவின் தலையில் சரமாரியாக குத்தினார். ரத்தவெள்ளத்தில் அவர், மயங்கி கீழே விழுந்தார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனு பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார், கொலை வழக்காக பதிவு செய்து சதீசை கைது செய்தனர். 

Next Story