பொங்கலூர் அருகே, பள்ளத்தில் கார் கவிழ்ந்து மருந்து விற்பனை பிரதிநிதி பலி - 3 பேர் காயம்


பொங்கலூர் அருகே, பள்ளத்தில் கார் கவிழ்ந்து மருந்து விற்பனை பிரதிநிதி பலி - 3 பேர் காயம்
x
தினத்தந்தி 19 Jan 2020 4:15 AM IST (Updated: 19 Jan 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொங்கலூர், 

கோவை வடவள்ளி, மாகாளியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் பரமேஸ். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 30). மகள் சித்ரா(25). ரஞ்சித்குமார் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. சித்ராவுக்கு திருமணமாகி விட்டது. அவர் தனது கணவர் வினோத்ராஜ்(32) மற்றும் மகன் சாய் விஷ்ணு(4) ஆகியோருடன் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பிரிவு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சித்ரா, கணவர், மகன், அண்ணன் ரஞ்சித்குமாருடன் ஒரு காரில் தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சனீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். அந்த காரை ரஞ்சித்குமார் ஓட்டிச்சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் இவர்கள் சென்ற கார் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவினாசிபாளையம் சுங்கம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ரஞ்சித்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. கண் இமைக்கும் நேரத்தில் சாலையோர 5 அடி ஆழ பள்ளத்தில் ஓடிய கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் காரில் இருந்தவர்கள், ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினார்கள். அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காருக்குள் சிக்கியவர்களை ஒவ்வொருவராக வெளியே மீட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவினாசிபாளையம் போலீசார் விபத்தில் காயமடைந்த வினோத்ராஜ், சித்ரா மற்றும் குழந்தை சாய்விஷ்ணு ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் விபத்தில் உயிரிழந்த ரஞ்சித்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவிலுக்கு சாமிகும்பிட சென்றபோது விபத்து ஏற்பட்டு மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story