தோட்டத்து வீட்டில் பதுக்கி வைத்த 15 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் - தொழில் அதிபர் கைது
அவினாசி அருகே தோட்டத்து வீட்டில் பதுக்கி வைத்த 15 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அவினாசி,
கேரளாவுக்கு வெளிமாநிலங்களில் இருந்து எரிசாராயம் கடத்தி செல்வது அதிகரித்து உள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பதுக்கி வைத்து சரக்கு வாகனங்களில் கேரளாவுக்குஎரிசாராயம் கடத்தி செல்லப்படுவதாக சேலம் மத்திய புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
கடந்த மாதம் பொள்ளாச்சி பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சின்னக்கானூரில் கணேசன் என்பவருக்குசொந்தமான தோட்டத்து வீட்டில் பதுக்கி வைத்து எரிசாராயம் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் சேலம் மண்டல மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் அவினாசி மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு தோட்டத்து வீட்டில் அதிரடியாக சோதனையிட்டனர். வீட்டிற்குள் வெள்ளை நிற கேன்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த கேன்களை திறந்து பரிசோதித்த போது அவற்றில் எரிசாராயம் இருந்தது தெரிய வந்தது. இதனால் மதுவிலக்கு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 425 கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதில் மொத்தம் 14 ஆயிரத்து 875 லிட்டர் எரிசாராயம் இருந்தது.
பின்னர் 425 கேன்களில் இருந்த எரிசாராயத்தையும் பறிமுதல் செய்து சரக்கு வாகனத்தில் ஏற்றி அவினாசி மதுவிலக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக அன்னூரை சேர்ந்த வீட்டு உரிமையாளர் கணேசனை பிடித்து போலீசார் விசாரித்தனர். போலீசாரிடம் கணேசன் கூறும் போது, அன்னூர் ஜீவாநகரில் பேக்கரி நடத்தி வருபவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெகன் என்கிற ஜனார்த்தனன் (வயது 52). அவர் தனக்கு பொருட்கள் வைப்பதற்காக குடோன் தேவைப்படுவதாக கூறி இருந்தார். இதன் பேரில் எனது தோட்டத்து வீட்டை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வாடகைக்கு அவரிடம் கொடுத்தேன். அவர் தான் அந்த வீட்டை பயன்படுத்தி வந்து உள்ளார் என்றார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே பேக்கரி பொருட்கள் வைப்பதாக வீட்டை வாடகைக்கு எடுத்த ஜெகன் அந்த தோட்டத்து வீட்டில் கேன்களில் எரிசாராயத்தை பதுக்கி வைத்து சரக்கு வாகனங்களில் கேரளாவுக்கு அவ்வப்போது கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வீட்டு உரிமையாளரான கணேசனை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். கைதான அவர் அன்னூரில் ஆயுர்வேத மருத்துவமனை, பொள்ளாச்சியில் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் தலைமறைவான ஜெகனை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story