வீர சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா' விருது வழங்குவதை எதிர்ப்பவர்கள் அந்தமான் சிறையில் 2 நாட்கள் தங்க வேண்டும் சிவசேனா எம்.பி. கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
வீர சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா' விருது வழங்குவதை எதிர்ப்பவர்கள் அந்தமான் சிறையில் 2 நாட்கள் தங்க வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை,
வீர சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா' விருது வழங்குவதை எதிர்ப்பவர்கள் அந்தமான் சிறையில் 2 நாட்கள் தங்க வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார். இதற்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா
மராட்டியத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கருக்கு மத்திய அரசின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சட்டசபை தேர்தலின் போது, மராட்டிய பாரதீய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. சிவசேனாவும் இதற்கு ஆதரவு தெரிவித்தது.
ஆனால் தற்போது மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அக்கட்சியினர் வீர சாவர்க்கரை விமர்சித்து வருகின்றனர்.
2 நாள் சிறையில் தங்க வேண்டும்
குறிப்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘ரேப் இன் இந்தியா' என்ற பேச்சுக்கு மன்னிப்பு கேட்க தன்னுடைய பெயர் ‘ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி’ என டெல்லியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். வீர சாவர்க்கர் பற்றிய அவரது இந்த சர்ச்சை பேச்சை சிவசேனா கண்டித்தது.
இந்த நிலையில், வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்ப்பவர்கள் அந்தமானில் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று 2 நாட்கள் தங்கி இருக்க வேண்டும். அப்போதுதான் சாவர்க்கர் அனுபவித்த வேதனைகள், தியாகங்களை உணர முடியும் என்று நேற்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
காங்கிரசாரை தான் அவர் மறைமுகமாக தாக்குவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆதித்ய தாக்கரே விளக்கம்
இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரேயிடம் கேட்டதற்கு, “எந்த அர்த்தத்தில் சஞ்சய் ராவத் பேசினார் என்பது தெரியவில்லை. ஆனால், சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. கருத்தியலில் வேறுபட்டு இருந்தாலும் இரு கட்சிகளும் மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக இணைந்து இருக்கிறோம். முரண்பாடு இருந்தாலும் ஒன்றுசேர்ந்து மக்கள் பணி செய்யலாம் என்பது தான் ஜனநாயகம். சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைவரையும் நான் மதிக்கிறேன்” என்றார்.
காங்கிரஸ் எதிர்ப்பு
இதற்கிடையே சஞ்சய் ராவத்தின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது சஞ்சய் ராவத்தின் தனிப்பட்ட கருத்தா? அல்லது சிவசேனாவின் அதிகாரப்பூர்வ கருத்தா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என மாநில பொதுப்பணித்துறை மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான் வலியுறுத்தி உள்ளார்.
வீர சாவர்க்கர் விவகாரத்தில் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியில் பனிப்போர் ஏற்பட்டு உள்ளது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story