நாகர்கோவிலில் ரெயில் முன் பாய்ந்து பால் வியாபாரி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


நாகர்கோவிலில் ரெயில் முன் பாய்ந்து பால் வியாபாரி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 19 Jan 2020 11:00 PM GMT (Updated: 19 Jan 2020 2:40 PM GMT)

நாகர்கோவிலில் ரெயில் முன் பாய்ந்து பால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே பஞ்சலிங்கபுரம் மடத்துவிளையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48), பால் வியாபாரி. இவருடைய மனைவி கல்யாணி. நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற ஆறுமுகம் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். எனினும் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.

இந்த நிலையில் நாகர்கோவில் பள்ளிவிளை ரெயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளம் அருகே தலை துண்டான நிலையில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். முதலில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

தற்கொலை

இதைத் தொடர்ந்து பிணம் கிடந்த பகுதியை சுற்றிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு ஸ்கூட்டர் கேட்பாரின்றி கிடந்தது. பின்னர் அந்த ஸ்கூட்டரை சோதனை செய்ததில், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் இருந்தது. அதை வைத்து விசாரித்தபோது பிணமாக கிடந்தவர் பால் வியாபாரி ஆறுமுகம் என்பது தெரியவந்தது.

மேலும் ஸ்கூட்டரில் ஆறுமுகம் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், “எனது தற்கொலைக்கு நானே காரணம். எனது கடனுக்காக தோப்பை விற்று வட்டி கட்டிவிட்டேன். கடன் வாங்கிய ரூபாயை விட வட்டி அதிகமாக செலுத்திவிட்டேன். எனவே இனிமேலும் வட்டி கொடுக்க என்னால் முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன்“ என்று எழுதி இருந்தார். மேலும் அந்த கடிதத்தில் மனைவியும், குழந்தைகளும் தன்னை மன்னித்துவிடும்படி உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது.

கடன் தொல்லை

அதோடு ஸ்கூட்டருக்கு அருகே மதுபாட்டில்களும் கிடந்தன. எனவே கடன் தொல்லையால் மனவேதனை அடைந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. தற்கொலை செய்யும் அளவுக்கு ஆறுமுகத்துக்கு கடன் பிரச்சினை ஏன் வந்தது? என்று போலீசாரிடம் கேட்டபோது, “ ஆறுமுகம் சமீபத்தில் புதிய வீடு கட்டியிருக்கிறார். இந்த வீடு கட்ட அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி உள்ளார். இதற்கு வட்டியும் செலுத்தி வந்துள்ளார். எனினும் அவரால் கடனை அடைக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம்“ என்றனர்.

போலீஸ் விசாரணை

மேலும் இதுதொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்திடம் கடன் கேட்டு தொல்லை கொடுத்தவர்கள் யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வருகிறார்கள். கடன் தொல்லையால் ரெயில் முன் பாய்ந்து பால் வியாபாரி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story