தஞ்சையில் 600 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் கோவிலில் 13 சிலைகள் கொள்ளை


தஞ்சையில் 600 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் கோவிலில் 13 சிலைகள் கொள்ளை
x
தினத்தந்தி 19 Jan 2020 11:15 PM GMT (Updated: 19 Jan 2020 5:17 PM GMT)

தஞ்சையில் 600 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் கோவிலில் 13 சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கரந்தை புதுக்குளம் ஜைனமுதலி தெருவில் ஆதீஸ்வரர் கோவில் உள்ளது. 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவில் சமணர் கோவிலாகும். நேற்றுமுன்தினம் இரவு பூஜை முடிந்தவுடன் கோவில் ஊழியர்கள் கதவை பூட்டிவிட்டு சென்றனர். இந்த கோவில் வாசலில் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் காலையில் கோலமிடுவது வழக்கம்.

நேற்று காலை வழக்கம் போல அந்த பெண் கோலமிட வந்தார். அப்போது அவர் கோவிலின் நுழைவு வாயிலின் மரக்கதவில் உள்ள துளை வழியாக கோவிலுக்குள் பார்த்தார். அப்போது சன்னதி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் இது குறித்து கூறினார்.

பின்னர் அவர், கோவில் குருக்கள் வீட்டுக்கு சென்று சாவியை வாங்கி வந்து முன்புற கதவை திறக்க முயன்றார். ஆனால் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பின்புறமாக சுற்றி வந்து பார்த்தார். அப்போது பின்புற கதவு திறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த அறங்காவலர் அப்பாண்டேராஜன் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று பார்த்தனர்.

அப்போது கோவில் வளாகம், சுற்றுச்சுவர்களில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. மேலும் கோவில் சன்னதி கதவு கியாஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

உடனே இது குறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவிலின் பின்புறமாக சுற்றுச்சுவரில் மர்மநபர்கள் ஏறி, கோவிலுக்குள் நிற்கும் மரத்தின் வழியாக உள்ளே இறங்கி சென்றது தெரியவந்தது.

மேலும் சன்னதி கதவை திறந்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த சிறிய, சன்னதிகளின் கதவுகளை கியாஸ் வெல்டிங் மூலம் துண்டித்து திறந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த சாமி சிலைகளை கொள்ளையடித்து கொண்டு கோவிலின் பின்புற கதவை திறந்து மர்மநபர்கள் தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

ஆதீஸ்வரர் கோவிலில் இருந்து 3 அடி உயர ஆதீஸ்வரர் ஐம்பொன் சிலை, வெண்கலத்தால் ஆன 1 அடி உயர மகாவீரர், 1½ அடி உயர சரஸ்வதி, ஜோலமாலணி, 1 அடி உயர பஞ்சமேரு, முக்கால் அடி உயர நவக்கிரக தீர்த்தங்கார், நவதேவதா, தருனேஷ்சன், பத்மாவதி, ½ அடி உயர நதீஸ்வரர், 1 அடி உயர பஞ்சநதீஸ்வரர், தாமிரத்திலான 1 அடி உயர 24-வது தீர்த்தங்கரர் உள்ளிட்ட 13 சிலைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர். தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினார். கொள்ளை போன சிலைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story