கோவை வனப்பகுதிக்குள் நடைபயிற்சிக்கு சென்ற மருத்துவமனை பெண் அதிகாரியை காட்டு யானை மிதித்து கொன்றது
கோவை வனப்பகுதிக்குள் நடைபயிற்சிக்கு சென்ற தனியார் மருத்துவமனை பெண் அதிகாரியை காட்டு யானை மிதித்து கொன்றது. 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இடிகரை,
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம், தடாகம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளன. அவை, அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், பொதுமக்களையும் தாக்கி வருகிறது.
காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதிக்குள் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கின்றனர். ஆனாலும் வனப்பகுதிக்குள் அவ்வப்போது சிலர் செல்வது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் கோவை கணபதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது40). இவர் கோவை சங்கரா கண் மருத்துவமனையில் நிர்வாக பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் பிரசாந்த் (45). இவர் இரும்புக்கடை நடத்தி வருகிறார்.
புவனேஸ்வரியும், பிரசாந்தும் தங்களது நண்பர்கள் உள்பட 8 பேருடன் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை வனப்பகுதிக்குள் நடைபயிற்சி செய்வதற்காக நேற்று காலை சென்றனர். அங்கு அவர்கள் தங்களின் கார்களை ரோட்டோரம் நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் நடந்து சென்றனர்.
அவர்கள், பாலமலை- குஞ்சூர் சாலையில் பசுமணி என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு எதிரே திடீரென்று காட்டு யானை ஒன்று வந்தது. இதை பார்த்து புவனேஸ்வரி உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து ஓட தொடங்கினர். ஆனால் அவர்களை விடாமல் காட்டு யானையும் துரத்தியது. இதில், புவனேஸ்வரியால் வேகமாக ஓடமுடியவில்லை. அப்போது அவருடன் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அதற்குள் புவனேஸ்வரியை காட்டுயானை துதிக்கையால் சுற்றி வளைத்து பிடித்து தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை காட்டு யானை தனது காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
புவனேஸ்வரியின் உடலை பார்த்து கணவன் பிரசாந்த் மற்றும் அவருடன் சென்றவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் யானை அங்கிருந்து சென்று விட்டது. யானை மிதித்ததால் புவனேஸ்வரியின் உடல் உருக்குலைந்து கிடந்தது.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகம் சுரேஷ் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், காட்டு யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரசாந்த் உள்பட 7 பேரிடமும், நடந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காட்டு யானை மிதித்து தனியார் மருத்துவமனை பெண் அதிகாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story