கோவை மாவட்டத்தில் 3.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்


கோவை மாவட்டத்தில் 3.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Jan 2020 4:00 AM IST (Updated: 19 Jan 2020 10:58 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் 3.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை,

போலியோ நோயை முற்றிலுமாக ஒழிக்கும் இந்தியாவில் ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்க விழா நேற்று காலை 8 மணிக்கு நடந்தது. முகாமில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.

இதில் கலெக்டர் ராஜாமணி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், வி.பி.கந்தசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி, அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார், இணை இயக்குனர் கிருஷ்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்

இதைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு சுகாதாரத்துறையில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக பல்வேறு சீர்மிகு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1,202 மையங்கள், நகர்புறங்களில் 379 மையங்கள் என மொத்தம் 1,581 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதுதவிர பஸ்நிலையங்கள், ரெயில்நிலையம், விமானநிலையம், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 36 மையங்களிலும், 18 நடமாடும் சிறப்பு மையங்கள் மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 3.33 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதை தாண்டி 3.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது.

போலியோ சொட்டு மருந்து மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்கள், பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 6,536 பேர் பணியாற்றினர். அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது. அது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக சிறப்பு குழுவினர் இன்று (திங்கட்கிழமை) முதல் 26-ந் தேதி வரை வீடுவீடாக செல்கிறார்கள்.

Next Story