சங்கொள்ளி ராயண்ணா சிலை திறப்பு நிகழ்ச்சியில் அரசியல் எதிரெதிர் துருவங்கள் ஒரே மேடையில் சந்திப்பு


சங்கொள்ளி ராயண்ணா சிலை திறப்பு நிகழ்ச்சியில் அரசியல் எதிரெதிர் துருவங்கள் ஒரே மேடையில் சந்திப்பு
x
தினத்தந்தி 20 Jan 2020 5:30 AM IST (Updated: 19 Jan 2020 11:24 PM IST)
t-max-icont-min-icon

அரசியலில் எதிரெதிர் துருவங்களான சித்தராமையா, ஈசுவரப்பா, எச்.விஸ்வநாத் ஆகியோர் நேற்று கே.ஆர்.நகர் தாலுகாவில் நடந்த சங்கொள்ளி ராயண்ணா சிலை திறப்பு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

மைசூரு, 

அரசியலில் எதிரெதிர் துருவங்களான சித்தராமையா, ஈசுவரப்பா, எச்.விஸ்வநாத் ஆகியோர் நேற்று கே.ஆர்.நகர் தாலுகாவில் நடந்த சங்கொள்ளி ராயண்ணா சிலை திறப்பு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினர். அவர்களைப் பார்த்து பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.

சித்தராமையா மைசூரு வந்தார்

முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பெங்களூருவுக்கு திரும்பிய அவர், நேற்று பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வந்தார்.

மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்த அவர் கார் மூலம் மைசூரு ராமகிருஷ்ணாநகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

எதிரெதிர் துருவங்கள்

பின்னர் அங்கிருந்து மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா தொட்டகொப்பலு கிராமத்தில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணா சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சித்தராமையாவின் அரசியல் எதிரிகளான பா.ஜனதா மூத்த தலைவரும், கிராம வளர்ச்சி துறை மந்திரியுமான ஈசுவரப்பா, கூட்டணி ஆட்சி கவிழ காரணமாக இருந்த எச்.விஸ்வநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அரசியலில் எதிரெதிர் துருவங்களாக விளங்கும் முக்கிய தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி சந்தித்து அருகருகே அமர்ந்ததால் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். அந்த பரபரப்புக்கு மத்தியில் பொதுமக்களை பார்த்து சித்தராமையா, ஈசுவரப்பா, எச்.விஸ்வநாத் ஆகியோர் கைகூப்பி வணங்கினர். பின்னர் அவர்கள் தங்களது இருக்கைகளில் அமர்ந்தனர். அதையடுத்து ஒருவரையொருவர் கைகுலுக்கி சிரித்து பேசியபடி பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

சிலை திறப்பு

பின்னர் 3 பேரும், ‘‘நாங்கள் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், சமுதாயம் என்று வந்தால் ஒற்றுமையாக இருப்போம். அரசியல் வேறு. சமுதாய ஒற்றுமை வேறு. நாங்கள் அரசியலில் எங்களைப்பற்றி ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்வதால் எங்களை பொதுமக்கள் தவறாக நினைக்கக்கூடாது. எங்களை தவறாக விமர்சித்து பேச வேண்டாம்’’ என்று தெரிவித்தனர். பின்னர் 3 பேரும் சங்கொள்ளி ராயண்ணாவின் சிலையை திறந்து வைத்து பேசினர்.

முதலில் எச்.விஸ்வநாத் பேசும்போது கூறியதாவது:-

யாரும் எதிரிகள் அல்ல

நாங்கள் அரசியலில் எதிரிகளாக இருந்தாலும் சமுதாயம் என்று வந்தால் ஒற்றுமையாக இருப்போம். மக்களுக்காக பாடுபடுவோம். மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசியல் நடத்துகிறோம். அரசியலில் யாரும் எதிரிகளும் அல்ல, நண்பர்களும் அல்ல.

யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை நாங்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வோம். அதேபோல்தான் சித்தராமையா செய்திருக்கும் நல்லாட்சி பற்றி பலமுறை மேடையில் பேசி இருக்கிறோம். அரசியல் என்று வந்தால் கட்சிகளின் கட்டுப்பாடுகளுக்கு நாங்கள் உடன்பட வேண்டும். அரசியல் வேறு. நண்பர்களாக இருப்பது வேறு. இவையெல்லாம் அரசியலில் சகஜம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விரோதிகளாக நினைப்பதில்லை

அதையடுத்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசியபோது கூறியதாவது:-

நான் யாரையும் விரோதிகளாக நினைக்கவில்லை. எல்லோரும் எனக்கு நண்பர்கள்தான். விரோதிகளாக இருந்தாலும் அவர்கள் எனக்கு நண்பர்கள்தான். அந்த மாதிரியான எண்ணத்தில்தான் நான் எல்லோரையும் நேசிக்கிறேன். அரசியலில் இருந்தாலும் சரி, இல்லாமல் இருந்தாலும் சரி எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.

சங்கொள்ளி ராயண்ணாவின் சிலை மைசூரு மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய இளைஞர்கள் சங்கொள்ளி ராயண்ணாவின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். அவருடைய தேசப்பற்று, அவர் நாட்டுக்காக செய்த தியாகங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இன்னும் 3 நாட்கள் தங்குகிறார்

இதையடுத்து சித்தராமையா மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா டவுனில் நடந்த கனகதாசர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் மைசூரு டவுன் ராமகிருஷ்ணாநகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். இன்னும் 3 நாட்கள் சித்தராமையா மைசூருவில் தங்க உள்ளார்.

அவர் மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.


Next Story