1 லட்சத்து 91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - கலெக்டர் தகவல்


1 லட்சத்து 91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Jan 2020 4:00 AM IST (Updated: 19 Jan 2020 11:13 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 1 லட்சத்து 91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். அதையடுத்து குழந்தைகளுக்கு, டாக்டர்கள் குழுவினர் போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர்.

அதன்படி திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனையில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமுக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவமனைக்கு வந்த சில பெண்களின் குழந்தைகளுக்கு கலெக்டர் போலியோ சொட்டு மருந்து வழங்கினார். அதையடுத்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில், பிறந்தது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த பணியாளர்கள், தன்னார்வ சங்கத்தினர் சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 192 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குனர் பூங்கோதை, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நளினி, மாநகராட்சி ஆணையர் செந்தில்குமார், நகர்நல அலுவலர் அனிதா, திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, ரத்த வங்கி அலுவலர் பிரபாகரன், குழந்தைகள் சிறப்பு சிகிச்சை தலைமை மருத்துவர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் கொடைக்கானலில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில், நகராட்சி ஆணையாளர் நாராயணன், சன் அரிமா சங்க தலைவர் ரவீந்திரன் ஆகியோர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர். வேடசந்தூரில் நடந்த முகாமில், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். பழனி ரோப்கார் நிலையத்தில் நடந்த முகாமில், சப்-கலெக்டர் உமா, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் நடந்த முகாமில், தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ., குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம், துணை தலைவர் யாகப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,313 மையங்களில் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Next Story