தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு பஸ் கண்ணாடியை உடைத்த காட்டு யானை


தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு பஸ் கண்ணாடியை உடைத்த காட்டு யானை
x
தினத்தந்தி 19 Jan 2020 11:00 PM GMT (Updated: 19 Jan 2020 6:43 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 60 யானைகள் வெளியே வந்தன. பின்னர் அவைகள் தடிக்கல் என்னும் கிராமத்தில் பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக தேன்கனிக்கோட்டையில் இருந்து தர்மபுரி நோக்கி செல்வதற்காக அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 10 பயணிகள் இருந்தனர்.

கண்ணாடியை உடைத்தது

காட்டு யானைகள் சாலையில் நிற்பதை கண்டவுடன் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ்சை பார்த்ததும் ஒரு யானை ஆக்ரோ‌‌ஷமாக ஓடி வந்தது. இதைப் பார்த்த டிரைவர் பஸ்சை மெதுவாக பின்னோக்கி இயக்கினார். ஆனாலும் அந்த யானை ஓடி வந்து பஸ்சின் முன் பக்க கண்ணாடியை துதிக்கையால் ஓங்கி அடித்தது.

இதில் பஸ் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. பயந்து போன பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். காட்டு யானை மேலும் பஸ்சை தாக்க முயன்றது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட டிரைவர் பஸ்சை வேகமாக பின்னோக்கி இயக்கினார். இதையடுத்து யானை அங்கிருந்து சென்று விட்டது.

விரட்டியடிப்பு

இதற்கிடையே காட்டு யானைகள் சாலையில் சுற்றித்திரிவது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தேன் கனிக்கோட்டை வனச்சரகர் (பொறுப்பு) சீதாராமன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் யானைகளை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இதைத் தொடர்ந்து 60 யானைகளும் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டன. அதன்பின்னரே அப்பகுதியில் வாகனங்கள் சென்றன. காட்டு யானை பஸ் கண்ணாடியை உடைத்தசம்பவம்தேன்கனிக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story