கட்டிட தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்: கழுத்தை நெரித்து கொன்றதாக மனைவி, 2 மகன்கள், மகள் கைது


கட்டிட தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்: கழுத்தை நெரித்து கொன்றதாக மனைவி, 2 மகன்கள், மகள் கைது
x
தினத்தந்தி 20 Jan 2020 3:45 AM IST (Updated: 20 Jan 2020 12:26 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மதுகுடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதால் கழுத்தை நெரித்து கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தர்மபுரி,

தர்மபுரி வேடியப்பன் திட்டு பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா (39). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். வேடியப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று இரவும் தங்கராசு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

ஆனால் மறுநாள் காலை வெகுநேரமாகியும் தங்கராசு எழுந்திருக்காமல் படுத்து இருந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் வந்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது தங்கராசு ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மனைவி உள்பட 4 பேர் கைது

இந்த நிலையில் தங்கராசுவின் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தங்கராசு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் போலீசார் வனிதா மற்றும் அவருடைய மகன்கள், மகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடீர் திருப்பம் ஏற்பட்டது. கட்டிட தொழிலாளியான தங்கராசு அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதும், சம்பவத்தன்றும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மேலும் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த வனிதா தங்கராசை கீழே தள்ளியதாகவும் தெரிகிறது.

பின்னர் கயிறு மூலம் தங்கராசுவின் கழுத்தை மகன்கள், மகள் உதவியுடன் வனிதா நெரித்து கொன்றதாக அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வனிதா, அவரது மகன் ஸ்ரீதர் (19), 16 வயது மற்றொரு மகன் மற்றும் 17 வயது கல்லூரியில் படிக்கும் மகள் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கட்டிட தொழிலாளியை மனைவி, மகன்கள், மகள் ஆகியோருடன் சேர்ந்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story