ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
x
தினத்தந்தி 19 Jan 2020 11:00 PM GMT (Updated: 19 Jan 2020 7:18 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

ஈரோடு,

போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்து முகாம் தொடங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 1,374 மையங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இதில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

வீடுகளில் உள்ள தாய்மார்கள் தங்களது குழந்தைகளை முகாமுக்கு ஆர்வமாக அழைத்து சென்று சொட்டு மருந்து கொடுத்தனர். மேலும், அக்கம் பக்கத்தில் குழந்தைகள் வைத்துள்ளவர்களுக்கும், அவர்கள் முகாம் நடப்பது குறித்து தகவல் தெரிவித்தனர்.

2 லட்சம் குழந்தை

பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளான பஸ் நிலையங்கள், ஈரோடு ரெயில் நிலையம், மார்க்கெட் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. பொங்கல் விடுமுறை முடிந்து ஏராளமானவர்கள் வெளியூர்களுக்கு சென்றதால், பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு அமைக்கப்பட்ட முகாமில் பலர் தங்களது குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்தனர்.

இந்த பணியில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, இந்திய மருத்துவ சங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 5 ஆயிரத்து 496 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 5 வயதுக்கு உள்பட்ட சுமார் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதேபோல் விடுபட்ட குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலமாக 2 நாட்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பவானி

பவானி அருகே காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டு பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை ெதாடங்கி வைத்தனர்.

முகாமில் எம்.எல்.ஏ.க்கள். கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர்.ராஜா, தனியரசு, மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி தலைவர் எஸ்மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story