மத்திய அரசை கண்டித்து 6 நாட்கள் நடைபயணம் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம்


மத்திய அரசை கண்டித்து 6 நாட்கள் நடைபயணம் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 20 Jan 2020 4:15 AM IST (Updated: 20 Jan 2020 12:51 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து 6 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் முத்துகுமார், சர்வேஸ்வரன், ராவுத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடுமுடி வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயிக்க வேண்டும். ஏழை மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் கொடுமுடியில் இருந்து ஊத்துக்குளி வரை 6 நாட்கள் நடைபயணம் வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்வது.

தி.மு.க. கூட்டணி

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பேரூராட்சி, நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தலை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பாராட்டப்பட்டனர்.

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், என்.கே.தங்கவேல், மகளிர் அணி மாவட்ட தலைவர் கலா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வினோத்குமார், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் விஜய், ஐ.என்.டி.யு.சி. மாவட்டத்தலைவர் கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், ராஜா சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story