1 லட்சத்து 42 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


1 லட்சத்து 42 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Jan 2020 10:30 PM GMT (Updated: 19 Jan 2020 7:23 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் 1 லட்சத்து 42 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஷில்பா, முகாமை தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் ஷில்பா மேலப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து முகாம் நடந்தது. கிராமப்புற பகுதிகளிலும், நகர்ப்புறங்களிலும் மொத்தம் 1,062 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், இடம் பெயர்ந்த கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மேலும் புறவழிச்சாலை, சுங்க சாவடிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாய்மார்கள் அருகில் உள்ள மையங்களுக்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து வழங்கினர்.

மருத்துவத்துறை சார்ந்த 639 பணியாளர்களும், செவிலியர் கல்லூரி மாணவர்கள் 178 பேரும், சத்துணவு பணியாளர்கள் 1,640 பேரும், ரோட்டரி குழுவை சேர்ந்த 12 பேரும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 1,014 பேரும் என மொத்தம் 3,483 பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 42 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Next Story