விளாத்திகுளத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.70 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - வாலிபர் கைது


விளாத்திகுளத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.70 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2020 3:45 AM IST (Updated: 20 Jan 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.70 ஆயிரம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் தலைமையில் போலீசார் நேற்று காலையில் விளாத்திகுளம்- கோவில்பட்டி சாலையில் கமலாபுரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரை பின்தொடர்ந்து சென்று காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரின் டிரைவர் முன்னுக்குபின் முரணாக பதில் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் காரில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த காரில் 10 அட்டைப்பெட்டிகள் இருந்தன. அவைகளை திறந்து பார்த்த போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோவில்பட்டியை சேர்ந்த கண்ணன் (வயது 33) என்பதும், அவர் காரில் கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளத்திற்கு புகையிலை பொருட் களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். தொடர்ந்து கார் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.70 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story