குடியுரிமை சட்டத்தை கண்டித்து மராட்டியத்தில் 24-ந் தேதி முழுஅடைப்பு பிரகாஷ் அம்பேத்கர் அறிவிப்பு


குடியுரிமை சட்டத்தை கண்டித்து மராட்டியத்தில் 24-ந் தேதி முழுஅடைப்பு பிரகாஷ் அம்பேத்கர் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2020 4:30 AM IST (Updated: 20 Jan 2020 3:18 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்டத்தை கண்டித்து மராட்டியத்தில் 24-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.

மும்பை, 

குடியுரிமை சட்டத்தை கண்டித்து மராட்டியத்தில் 24-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.

பிரகாஷ் அம்பேத்கர் பேட்டி

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் புதிய சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில், இந்த சட்டத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு சட்டமேதை அம்பேத்கரின் பேரனும், வஞ்சித் பகுஜன் அகாடி தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் அழைப்பு விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தினால் நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது. அந்த சட்டத்தை மத்திய அரசு பலவந்தமாக அமல்படுத்த முயற்சிக்கிறது.

முழுஅடைப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் வருகிற 24-ந்தேதி மராட்டியத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

இந்த முழுஅடைப்பு போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் பங்கேற்க வேண்டும். நாடு தற்போது பொருளாதார திவாலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி காரணமாக நாட்டுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் தவறானவை.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் இந்த முழுஅடைப்பு போராட்டம் தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயையும் சந்தித்து பேசினார்.

Next Story