போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்


போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Jan 2020 4:00 AM IST (Updated: 20 Jan 2020 3:59 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை, 

மாவட்ட பொது சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு ஒரேகட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழா சிவகங்கை பஸ்நிலையம் அருகில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலையில் நடைபெற்றது. சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:- போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நாடு முழுவதும் ஒரேகட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் 5 வயது வரை உள்ள 1 லட்சத்து 33 ஆயிரத்து 131 குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவை உள்ளடக்கிய 1,192 மையங்களிலும், 61 நடமாடும் மையங்கள், 17 பஸ் நிலையங்கள் உள்பட, மாவட்டம் முழுவதுமாக 1,270 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

மேலும், ரெயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சத்துணவுத்துறை, கல்வித்துறை, நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் பிற துறைகளை சார்ந்த சுமார் 5 ஆயிரத்து 500 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோமகேஸ்வரன், சிவகங்கை நகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், டாக்டர்கள் கலாவதி, அரவிந்த் ஆதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் கலையரங்கம் பகுதிகள், பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்கள் என பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் மையங்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட ஏரியூர் ஊராட்சியில் சிங்கம்புணரி ஒன்றிய தலைவர் திவ்யா பிரபு தலைமையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நபிஷா பானு முன்னிலையில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி பஸ்நிலையம் உட்புறம் சிங்கம்புணரி தாசில்தார் பஞ்சவர்ணம் தலைமையில் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் மருத்துவர்கள் போலியோ சொட்டு மருந்துவழங்கினர். எஸ்.வி.மங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி சீனிவாசன் தலைமையில் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

பிரான்மலை

பிரான்மலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியன் என்ற பாண்டி மோகன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், அங்கன்வாடி மையத்திலும் பள்ளிகளிலும் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். மல்லாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விஜயா ராதாகிருஷ்ணன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு உத்தரவின்பேரில் அனைத்து அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் பொது மையங்கள் உள்ள இடங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்சி மருத்துவர் பாலா அபிராமி மற்றும் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர் தினகரன் மற்றும் சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர்.

Next Story