குடியுரிமை திருத்த சட்டம் மூலம் ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறார்கள் - துரைமுருகன் குற்றச்சாட்டு
குடியுரிமை திருத்த சட்டம் மூலம் ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறார்கள் என்று வேலூரில் நடந்த மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டில் துரைமுருகன் பேசினார்.
வேலூர்,
மனிதநேயமக்கள் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான மாநாடு வேலூர் மண்டித்தெருவில் நேற்று இரவு நடந்தது. மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கி பேசினார்.
இதில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலைசிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
துரைமுருகன் பேசியதாவது:-
நீங்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள். இந்தியா உங்கள் தாய்நாடு. இந்த நாட்டில் எத்தனையோ இனங்கள் உள்ளன. அதில் நீங்கள் ஒரு இனம். மதத்தால் வேறுபட்டவர்கள், வேறு ஒன்றுமில்லை. ஹிட்லர் யூதர்களைஅழித்தார். இவர்கள் இஸ்லாமியர்களை குறி வைக்கிறார்கள். ஹிட்லருக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.
ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறார்கள். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும்தான். எனவே கட்சிக்கு அப்பாற்பட்டு இதனை அனைவரும் எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில் இந்தியா சவாலான இடத்தில் இருக்கிறது. இதுவரை ஆட்சி மாறியிருக்கிறது, பிரதமர்கள் மாறியிருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது.
ஆட்சி மாற்றம் நடப்பது தவறல்ல, ஆனால் நாட்டின் நடைமுறையை மாற்றுவதை ஏற்கமுடியாது. இந்திய கலாச்சாரம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி வெற்றிபெற்றது போன்று இந்த போராட்டத்திலும் நாம் வெற்றிபெற வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story